மனக்கோயில்


இறைவன் மீது அன்பும் பக்தியும் கொண்ட பூசலார்  இறைவனுக்கு ஒரு கோயிலைக் கட்ட எண்ணினார். பலரையும் சந்தித்து உதவிகளைக் கேட்டார் எவ்வளவு முயன்றும் அவரால் இந்த பூவுலகில் கோயிலைக் கட்ட முடியவில்லை. மனம் வாடினார் அழுதார், இயலாதவனாகியதை எண்ணி இறைவனைப் பாடினார், தொழுதார்  இறுதியில் தன்னுள்ளே இருக்கும் இறைவனுக்கு தன் மனதிற்குள்ளேயே கோயில் கட்ட முடிவு செய்தார்.
தூய்மையே உருவமாயிருந்த பூசலார் தனது எண்ணத்தில் சிறிதும் மாறாது எப்படியெல்லாம் கோயில் கட்ட விரும்பினாரோ அப்படியே மனதில் கோயில் கட்ட, தேவையான அனைத்து பொருட்களையும் தேடித்தேடி தேர்வு செய்தார். அவர் தேர்வு செய்தவை அனைத்தும் மிகசிறப்பானவையாக இருந்தன. ஒவ்வொரு நாளும், அடிக்கல் நாட்டுவது முதல் கோபுரத்தில் கலசம் வைப்பது வரை படிப்படியாக மனதில் நினைத்து நெடுநாள் கோயில் திருப்பணியைச் செய்தார். ஒருவாராக அந்த கொயிலைக் கட்டி முடித்து கும்பாபிஷேகத்திற்குத் தேவையான அனைத்தையும் ஆயத்தம் செய்து வைத்துக்கொண்டார் ( மனதளவில் ). மிகச்சிறந்த ஒரு நல்ல நாளை நிர்ணயம் செய்தார். தான் கட்டிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய  இறைவனை அன்போடு அழைத்தார்.
இதற்கிடையில் கஞ்சிபுரத்தில் காடவர் கோமான் என்ற மன்னன் பக்தியும் அன்பும் மிகுந்து பெரும்பொருட்செலவு செய்து மிக அழகிய கோயிலைக் கட்டிமுடித்து  பூசலார் வைத்த நாளிலேயே கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு அனைத்து வேலைகளையும் மிகச்சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் செய்தார்.
கும்பாபிஷேகத்திற்கு முன்னாள் காடவர் கோன் கனவில் சிவபெருமான் தோன்றி “அன்பனே ! திருநின்றவூரில் பூசலார் என்ற உத்தமன் பல நாள் முயன்று முடித்த திருக்கோயிலில்  நாளை கும்பாபிஷேகம் , நான் அங்கு செல்ல வேண்டும், நீ கும்பாபிஷேகத்தை வேறு ஒரு நாளில் வை நான் வருகிறேன்” என்று கூறி மறந்தார்.
கண்விழித்து எழுந்த மன்னன் யாரோ எப்படியோ கட்டிய கோயிலுக்கு இறைவன் செல்ல துடிக்கிறார் என்றால் அந்த கோயிலைக் கட்டியவரின் இறை அன்பும் அந்த கோயிலும் எந்த அளவிற்கு சிறப்பானதாக இருக்கும் என்று எண்ணிவியந்து தானே அந்த கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும், அந்த அடியவரையும் தொழவேண்டும் என முற்பட்டார்.
திருநின்றவூர் வந்தடைந்தார், கும்பாபிஷேகத்திற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை , கோயிலைத்தேடினார் காணவில்லை, சான்றோர்களிடம் புதியதாகக் கட்டிய கோயில் எங்கே, கும்பாபிஷேக ஏற்பாடுகள் எங்கே, கோயிலைக்கட்டிய பூசலார் எங்கே என்று கேட்டார். மன்னனே இந்த கேள்விகளைக் கேட்க அனைவரும் திகைத்து, இங்கே கோயிலும் கட்டவில்லை! அதற்கு கும்பபிஷேகமும் இல்லை ! ஆனால் நீங்கள் தேடும் பூசலார் அதோ அந்த சிறிய வீட்டில்தான் குடியுள்ளார் என பூசலாரின் வீட்டை சுட்டிக்காட்டினர்.
மன்னன் பூசலார் வீட்டிற்குள் சென்றார், பூசலாரை பணிந்து வணங்கினார், இறைவன் கனவில் தோன்றியதைக் கூறினார். பூசலாரிடம் கோயில் எங்கே எனக்கேட்டார. பூசலார் தான் கட்டியது மனக்கோயிலே அதற்குதான் இன்று கும்பாபிஷேகம் வைத்து நடத்திக்கொண்டுள்ளேன் , அடியேனின் மனக்கோயிலை இறைவன் ஏற்றுக்கொண்டு தங்களுக்கு அறிவுறுத்தியுள்ளாரே என்று மகிழ்ந்தார்.
மன்னன் அதிசயமுற்றான் மனக்கோயிலுக்கு இறைவன் இறங்கி வருகிறான் என்பதை உணர்ந்து பூசலாரை பலமுறை விழுந்து  வணங்கினான்.
அன்பும் சிவமும் ( இறைவன் ) இரண்டென்பர் அறிவிலார் … என்றார் திருமூலர். அன்பிற்கு அடிமை இறைவன்.

Comments