ஏழுமலைவாசன் – 1 தொடர்கிறது

ஏழுமலைவாசன் – 1 தொடர்கிறது
பிரம்மா நாரதரிடம், ""மகனே! நீ கலகக்காரன் என்பது ஊர் அறிந்த உண்மை. இன்று உன் தந்தையிடமே கலகம் செய்ய வந்திருக்கிறாய் போலும்! நீ சகலலோகங்களிலும் சஞ்சரிப்பவன். சகல சக்திகளையும் தவத்தின் மூலம் பெற்றுள்ளாய். நீ நினைத்தாலே சகலமும் நடந்து முடிந்துவிடும். நாராயணனின் திருப்பாற்கடல் முன்னால் நாங்கள் செல்ல முடியாது. ஜெய, விஜயர்கள் தடுத்துவிடுவார்கள். அவர்களது அனுமதி பெற்றாலும் கூட, கரையில் நின்றே அவரைத் தரிசிக்க முடியும். நீ அப்படியா! அவர் அருகேயே செல்பவன். பாற்கடலின் மேல் நின்று கொண்டே அவரிடம் பேசும் ஆற்றலுள்ளவன். மேலும், உன் வாயில் "நாராயண' நாமம் ஒலித்துக் கொண்டே இருக்கும். சக்தி மிக்க உன்னால் அவரை எந்நேரமும் அருகில் சென்று பார்க்க முடியுமே! எனவே நீயே போய் நாராயணனை பார்,'' என்றார். ஒருவரிடம் ஒரு விஷயத்தை சொல்லும் முன்பு, பிறர் சொன்னதை வைத்து சொல்லக்கூடாது. அதில் முன் பின்னாக விஷயங்கள் இருக்கும். நேரில் போய் பார்த்து கேட்டறிந்தால் தான் சரியான தகவல்களை பெற முடியும். நாராயணரிடம் புகார் சொல்லும் முன்பு பூலோகத்தின் தன்மையை நேரில் போய் கண்டறியவும், நாராயணன் அங்கு பிறப்பதற்கு ஏற்ற இடத்தைக் கண்டு பிடிக்கவும் நாரதர் பூலோகம் வந்து சேர்ந்தார். எத்தனையோ லோகங்கள் இருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டாலும், இந்த உலகத்தின் பேரில் தாம் "பூ' இருக்கிறது. "பூ' மணக்கும் தன்மையும், வாடும் தன்மையும் உடையது, மலர்ந்த பூவைக் காணும் போது, மனம் மகிழ்கிறது.
இதுபோல் நல்லவர்கள் பலர் தங்கள் செயல்பாடுகளால் இவ்வுலகை மகிழச்செய்கிறார்கள். ஆனால், இதே உலகில் பிறந்த வேறு சிலரோ, தங்கள் செயல்பாடுகளால் உலகைவாடச் செய்கிறார்கள். கெட்டவர்கள் செய்யும் கைங்கர்யத்தால் உலகிலுள்ள நல்லவர்களும் வாடுகிறார்கள். இதனால் தான் இந்த உலகை "பூலோகம்' என்றனர். இத்தகைய குணாதிசயம் கொண்ட உலகத்தை வாழச் செய்ய வந்து சேர்ந்தார் நாரதர். மற்ற தேவர்கள் இங்கு வந்திருக்கலாமே. அவர்கள் பூமிக்கு வராமலே இங்கு வந்த காரணம் என்ன?
- தொடரும்

Comments