திருமாலின் கைகளில் கண்... தாமரை!

திருமாலின் கைகளில் கண்... தாமரை!
கண் நோய் தீர்க்கும் திருமால்பூர்!     


     
    திருமாலின் திருக்கரங்களில் கண்ணும் தாமரையும் ஏந்தியிருக்கும் திருக்காட்சியை தரிசித்திருக்கிறீர்களா? திருமாலுக்கு சிவனார் அருளிய அந்தத் தலம்... திருமால்பூர். வேலூர் மாவட்டத்தில் உள்ளது திருமால்பூர். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, திருமால்பூருக்கு புறநகர் ரயில்கள் உள்ளன. காஞ்சி புரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில், 14 கி.மீ. தொலைவில் உள்ளது திருமால்பூர். அதேபோல, சென்னையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில், காஞ்சிபுரத்தை அடுத்து உள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் வந்து, அரக்கோணம் செல்லும் சாலையில் பயணித்தால், 14 கி.மீ. தொலைவில் உள்ள திருமால்பூர் ரயில்வே ஸ்டேஷனை அடையலாம். அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவு சென்றால், ஊரையும் ஊருக்கு நடுவே உள்ள ஸ்ரீமணிகண்டீஸ்வரர் ஆலயத்தையும் அடையலாம்.

  அற்புதமான இந்த ஆலயத்தில், வருகிற 25&ம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது மகா கும்பாபிஷேகப் பெருவிழா!

   ஸ்ரீமணிகண்டீஸ்வரர் எனும் திருநாமத்துடன் லிங்க வடிவினராக சிவனார் காட்சி தரும் கருவறையையும், அந்தக் கருவறைக்கு எதிரில் நின்ற திருக்கோலத்தில்  சிவனாரைப் பார்த்து கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தரும் திருமாலையும் தரிசிக்கலாம்!
  ‘நீ இங்கு தங்கி, கடும் தவம் செய்து வழிபட்டதால், இந்தத் தலம் உன் பெயரிலேயே அழைக்கப்படட்டும்’ என அருளி மகாவிஷ்ணுவை ஆசீர்வதித்தார் சிவபெருமான். திருமால் வணங்கிப் பேறு பெற்றதால், இந்த ஊர் ‘திருமால்பேறு’ என்றே அழைக்கப்பட்டது. காலப்போக்கில், அது திருமால்பூர் என்றானது.

இந்த ஊருக்கு ஹரிச்சக்ரபுரம் எனும் பெயரும் உண்டு.
  குபன் எனும் அரசனுக்காக, அவனுடைய தேசத்துக்காக, தேச மக்களுக்காக, ததீசி என்பவனுடன் திருமால் போரிட்டார். சர்வ வல்லமை கொண்ட, வரங்கள் பல பெற்ற ததீசியை, தன் சக்ராயுதத்தைக் கொண்டு அழித்தார் திருமால். அப்போது அவரின் சக்ராயுதம் உடைந்து போனதாம்! உடனே தேவர்கள், ‘சிவபெருமானிடமும் சக்கரம் ஒன்று உண்டு. சலந்தராசுரன் எனும் அரக்கனை அதைக் கொண்டுதான் அழித்தொழித்தார் ஈசன். எனவே, அவரிடம் சக்கரம் வேண்டி, தவமிருங்கள். நிச்சயம் தந்தருள்வார். அந்தச் சக்கரம் தங்களிடம் வந்துவிட்டால், அதன்பின் எவராலும் தங்களை வெல்ல முடியாது. தவிர, உலகில் உள்ள இன்னும் பல அநீதிக்காரர்களையும் நீங்கள் அழிக்கலாம்’ என்றார்கள்.

  அதன்படி, மகிழ மரமும் வில்வ மரமும் சூழ்ந்த இந்த வனப்பகுதிக்கு வந்தார் திருமால். அங்கே திருக்குளம் ஒன்றை உருவாக்கினார். அந்தக் குளத்தில் இருந்து நீரை எடுத்து வந்து, சிவலிங்கத் திருமேனிக்கு தினமும் அபிஷேகம் செய்து வந்தார். குளத்தில் அழகழகாய் தாமரைப் பூக்கள் மலர்ந்திருந்தன.
  ‘ஈசனே! உனக்கு ஆயிரம் மலர்களைக் கொண்டு பூஜிக்கிறேன். ஆயிரமாவது மலரால் உனக்கு பூஜை செய்யும் வேளையில், எனக்கு சக்ராயுதத்தை வழங்கி அருள்வாயாக!’ எனும் பிரார்த்தனையுடன், சிவனாரை நினைத்து, பூஜையிலும் தவத்திலும் மூழ்கினார் திருமால்.
  சோதிப்பதையே தன் விளையாட்டாகக் கொண்ட சிவனார், திருமாலையும் சோதித்து விளையாடத் தவறவில்லை. ஆயிரம் மலர்களில் இருந்து ஒரேயொரு தாமரையை மறையச் செய்தார்.

  திருக்குளத்து நீரால் அபிஷேகம் செய்து, அலங்காரம் பண்ணி, ஒவ்வொரு தாமரையாக எடுத்து, சிவலிங்கத் திருமேனியில் வைத்து அர்ச்சித்த திருமால், சிரத்தையாகவும் ஆத்மார்த்தமாகவும் சிவபூஜை செய்த அதேவேளையில், பூக்களையும் எண்ணிக்கொண்டே வந்தார். 999 வரை எண்ணியவர், அதிர்ந்துபோனார். ஆயிரம் என்று எண்ணி அர்ச்சிப்பதற்கு மலர் இல்லை. ‘சிவனே... இதென்ன சோதனை! இன்னுமா என் மீது கரிசனம் வரவில்லை. என்னை சோதித்துதான் என் பக்தியை அறிந்துகொள்ளவேண்டுமா நீ!’ என்று புலம்பித் தவித்தார்.

பரபரவென குளத்துக்கு ஓடி வந்தார். ஏற்கெனவே குளத்தில் இருந்த தாமரைகளையெல்லாம் எடுத்தாயிற்றே! திருமாலுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஒரு மலர் காரணமாக தன் பூஜை தடைப்படுவதா என்று பதறினார். மீண்டும் சிவலிங்கத் துக்கு அருகில் ஓடிப் போய் நின்றார். ‘ஆயிரமாவது பூவாக, தாமரையாக, என் கண்களில் ஒன்றையே பிடுங்கி அர்ச்சிக்கிறேன். அப்போதாவது நீ என் மீது இரக்கம் காட்டுகிறாயா என்று பார்க்கிறேன்’ என்று சூளுரைத்தபடி,  அங்கே இருந்த கத்தியை எடுத்துத் தன் கண்ணைப் பெயர்த்தெடுத்தார். சிவலிங்கத் திருமேனியில் வைத்து, மனதார வேண்டினார். அடுத்த கணம், அங்கே ரிஷபாரூடராகக் காட்சி தந்தார் சிவபெருமான்.  மனமுருகினார் திருமால். அந்த நிமிடமே, திருமாலின் கண் மீண்டும் அவருக்குத் திரும்பக் கிடைத்தது.

  ‘இதோ, நீ கேட்ட சக்ராயுதம்! இனி, இது ஹரனின் சக்கரம் அல்ல; ஹரியான உன்னுடைய சக்கரம். ஹரிச்சக்கரம். இனி, இந்தத் தலம் திருமால் பேறு என்றும், ஹரிச்சக்ரபுரம் என்றும் வழங்கப்படும்’ என அருளினார்.

  கோயிலுக்கு முன்னே திருமால் உருவாக்கிய திருக்குளம் இன்றைக்கும் உள்ளது. சக்ராயுதம் வேண்டி, பூஜிப்பதற்காக உருவாக்கப்பட்ட குளம் என்பதால், இந்தக் குளத்துக்கு ஸ்ரீசக்ரதீர்த்தம் என்று பெயர்.

ஊர் அமைவதற்கும், ஊரின் பெயராக தன் பெயர் அமைவதற்கும்  காரணமாக அமைந்த திருமால், ஸ்ரீமந் நாராயணர், மூலவராகவும் உத்ஸவராகவும் காட்சி தருகிறார், இங்கே!
ஒரு கரத்தில் தாமரையையும், இன்னொரு கரத்தில் தன் கண்ணையும் வைத்திருக்கிற திருமாலின் அழகு கொஞ்சும் உத்ஸவத் திருமேனியைக் கண்ணாரத் தரிசித்தாலே போதும், நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.

  கண்களில் அடிக்கடி உறுத்தல், பார்வையில் கோளாறு எனத் தவிப்பவர்கள் இங்கு வந்து, பெருமாளுக்கும் சிவனாருக்கும் மாலைகள் சார்த்தி வழிபட்டால், கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் யாவும் கண்ணுக்குத் தெரியாமல் சட்டென மறைந்துவிடும் என்கிறார்கள் பக்தர்கள்.

  ஸ்ரீமணிகண்டீஸ்வரருக்கு முடிந்த அளவு தாமரைப் பூக்களை சமர்ப்பியுங்கள். 25&ம் தேதி கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளுங்கள். தாமரையைப் போலவே வாழ்க்கையும் மலரும். மணம் வீசும்.

Comments