லீலை கண்ணன் கதைகள்...42…கிருஷ்ணனுடன் கோபியர்…*

*லீலை கண்ணன் கதைகள்...42…கிருஷ்ணனுடன் கோபியர்…*
ஒரு நாள் இரவு நேரம், மல்லிகைமனம் முழுவதும் பரவி இருந்தது. நிலவானது எல்லா இடங்களிலும் குளுமையையும் ஒளியையும் தந்தது. இயற்கை அழகாகவே இருந்தது. கிருஷ்ணன் அவன் கைகளில் புல்லாங்குழல் வைத்துகொண்டு யமுனை நதி கரையில் வாசித்து கொண்டு இருந்தான்.
அவனின் புல்லாங்குழல் ஓசை பிருந்தாவனம் வரை சென்றது. அங்கு இருந்த மாக்கள் அனைத்தும் அதனை கேட்டு கொண்டு இருந்தன. அந்த ஓசை கிருஷ்ணனின் புல்லாங்குழல் ஓசையாக இருக்கும் என்று நினைத்தார்கள் கோபியர். எங்கு இருந்து வருகிறது என்று அறிய அனைத்து கோபியர்களும் அவர்கள் வீட்டில் இருந்து யமுனை நதி கரையை நோக்கி ஆவலுடன் ஓடினார்கள்.
ஒருத்தி பால் கறந்து கொண்டு இருக்கும் நேரத்தில் குழல் ஓசையை கேட்டு அந்த பாத்திரத்தை அங்கேயே போட்டு விட்டு ஓடினாள். சிலர் பாலினை அடுப்பில் வைத்து விட்டு பாதியில் பொங்கும் என்று கூட நினைக்காமல் கிருஷ்ணன் குழல் ஓசை கேட்டு எழுந்து சென்றனர். அனைத்து பெண்களும் அவர்களுடைய கணவர் குழந்தைகள் பெற்றோர்கள் அனைவரையும் குழல் ஓசையில் மறந்தனர். பெண்கள் அவர்களின் கண்களை மூடி கிருஷ்ணனையே நினைத்தனர், குழல் ஓசையில் மயங்கினர்.
கிருஷ்ணன் அவர்களை பார்த்து "ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேட்டான், இந்த நிலவு ஒளியை ரசிக்க வந்தீர்களா? இங்கு பல உயிர் கொள்ளும் மிருகங்கள் உள்ளன, திரும்பி சென்று விடுங்கள். உங்கள் முதியோர்கள் கோபமாக இருப்பார்கள், அவர்கள் கோபம் அதிகரிக்கும் முன் சென்று விடுங்கள்" என்று கூறினான்.
கோபியர்கள் இதை கேட்டவுடன் மனம் வருந்தினார்கள், இதை கிருஷ்ணனிடம் அவர்கள் எதிர் பார்க்கவில்லை. அனைவரின் கண்களிலும் நீர் ததும்ப ஆரம்பித்தது. ஒருத்தி மட்டும் கிருஷ்ணனை நோக்கி "நீ இப்படி கூறுவது சரி அல்ல கிருஷ்ணா, எங்கள் குழந்தைகளோ கணவர்களோ எங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கவில்லை. உன்னுடைய குழல் தான் மகிழ்ச்சியை அளித்தது. உன்னிடம் இருந்து எங்களை பிரிக்க நினைக்காதே. மக்கள் உன்னை கடவுள் என்கிறார்கள், ஆனால் அது எங்களுக்கு முக்கியம் இல்லை. எங்கள் அனைவரின் மனதில் நீ தான் இருக்கிறாய், உன்னை மட்டும் பார்க்கவே எங்கள் கண்கள் உள்ளது. உன்னுடைய குழல் ஓசை கேட்கவே எங்கள் காதுகள் உள்ளன. இந்த அன்பு இன்று வந்தது அல்ல, உன்னுடைய பிறப்பில் இருந்தே இருக்கும் அன்பு. எங்களுடைய அன்பை ஏற்றுகொள்."
கிருஷ்ணன் எல்லாருடைய ஆசைகளையும் நிறைவேற்றுபவன் அல்லவா, இதனை கேட்ட பிறகும் எவ்வாறு நிராகரிக்க முடியும்? பக்தர்களுக்காக எதையும் செய்ய தயாராக உள்ளான். பிறகு கிருஷ்ணன் பாடியும் ஆடியும் அனைவரையும் சந்தோஷபடுத்தினான். ஒவ்வொறு கோபியருடனும் ஆட ஒவ்வொறு கிருஷ்ணன் தோன்றினான். ஆனால் எல்லா கோபியருக்கும் அவர்களுடன் இருக்கும் கிருஷ்ணன் மட்டுமே கண்ணில் தென்பட்டான். எல்லா கோபியருடனும் சந்தோஷமாக விளையாடினான். அனைவரின் மனதிலும் மகிழ்ச்சி பெருக்கொடியது. கிருஷ்ணன் அன்பினை நினைத்து மிகவும் பெருமை பட்டனர். உடனே கிருஷ்ணன் அவர்களுக்கு சினமூட்டுவதர்காக அங்கு இருந்து மறைந்தான்.
கிருஷ்ணனை காணவில்லை என்றவுடன் அனைத்து கோபியரும் மனம் வருந்தினர். அவர்கள் அழுது கொண்டே கிருஷ்ணனின் பாடலை பாடினர். கிருஷ்ணன் இல்லை என்றால் அவர்களின் மூச்சே நின்று விடும் என்பது போல நினைத்தார்கள்.
மறுபடியும் கிருஷ்ணன் அவர்கள் முன் தோன்றினான், மஞ்சள் நிற ஆடையுடன், கழுத்தை சுற்றி மாலை அணிந்தும், மீனை போன்ற காது வளையமும் நிலவொளியில் மினுமினுத்தது. உடனே அனைவரும் ஆடி பாட ஆரம்பித்தார்கள். நேரம் போவதும் தெரியாமல் இருந்தார்கள்.
எல்லோரும் சேர்ந்து நடனம் ஆட ஆரம்பித்தார்கள். அனைவரும் வட்டமாக நின்ற பின், எல்லா கோபியர் பக்கத்திலும் கிருஷ்ணன் தோன்றினான், எல்லோரும் கிருஷ்ணன் கையை பிடித்து கொண்டதாக நினைத்து கொண்டார்கள். எல்லோரும் சேர்ந்து நடனம் ஆடினர். எல்லாருடைய பக்தியும் இதில் வெளிப்பட்டது.
அந்த இரவு முடிவுக்கு வந்தது. அனைவரையும் திரும்ப போக சொல்லி கட்டளை இட்டான் கிருஷ்ணன். விருப்பமே இல்லாமல் அனைவரும் திரும்பினர், இருந்தாலும் முழு இரவு வீட்டுக்கு செல்லாமல் இருந்ததற்கு அனைவரின் மனதிலும் பயம் இருந்தது. ஆனால் அவர்களை யாரும் எதுவும் சொல்லவில்லை. கிருஷ்ணன் ஊரில் உள்ள அனைவரின் மனதையும் மயக்கி இவர்களை காப்பாற்றினான்.
அனைத்தும் கிருஷ்ணனின் லீலைகளே...

Comments