இப்படி ஒரு கனவு

இப்படி ஒரு கனவு

யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காததால் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டது தமிழ்நாட்டில்.

வந்த ஜனாதிபதி அதிரடியாக சில காரியம் செய்தார்.
அதில் ஒன்று; தமிழ்நாடு அரசு பேரில் இருக்கும் மொத்த கடனையும் கணக்கிட்டு பார்த்து அதை தமிழ்நாட்டின் மக்கள் ஒவ்வொருவருக்கும் சமமாக பிரித்தார்.
ஒவ்வொரு தலைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வந்தது. அதை மக்கள்தான் கட்டவேண்டும் என்றார். மக்கள் எல்லோரும் அலறினார்கள். 'உங்களை ஆண்ட முந்தைய ஆட்சியாளர்களால் உங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்களாலும் இலவசங்களாலும்தான் இந்த கடன் வந்தது. இலவசங்களுக்கு ஆசைப்பட்டு ஆட்சியை அவர்கள் கையில் கொடுத்தது உங்கள் தப்பு. நீங்கள் செய்த தப்புக்கு தண்டனை அனுபவித்துதான் ஆகவேண்டும். அதனால் உங்களுக்காக வாங்கிய கடனை நீங்கள்தான் அடைக்கவேண்டும். மீறினால் உங்கள் கடன் தொகைக்கு ஏற்ப உங்கள் வீட்டில் உள்ள பொருட்களோ, சொத்துக்களோ ஜப்தி செய்யப்படும்' என்றார். அனைவரும் வேறு வழியின்றி கட்ட துவங்கினர். கட்ட மறுத்தவர்களின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டது.
சில மாதங்களில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த முறையும் ஒவ்வொரு கட்சியும் இலவச தூண்டிலை போட்டு தேர்தல் அறிக்கை வெளியிட்டது. ஆனால் அந்த அறிக்கைகள் சுண்டல் மடிக்கவே பயன்பட்டது.
இப்படி ஒரு கனவு ராத்திரி. பதறியபடி எழுந்தேன். விடிஞ்சிருச்சா என்று பார்த்தேன். இருட்டாகவே இருந்தது.
விடியவே இல்லை...
மீண்டும் தூங்க ஆரம்பித்தேன்.

விடியல் உங்கள் கையில்...
வாக்களிக்க மறவாதீர்கள்...!

Comments