ரயிலில் கிடைத்த பாடம்...பளார் பதிவு...

சமீபத்தில் இணையத்தில் நாம் கண்ட ‘பளார்’ பதிவு இது.

நம்மை ரொம்பவே சிந்திக்க வைத்தது. பதிவை எழுதியவரை தொடர்புகொண்டு உரிய அனுமதி பெற்று நமது தளத்தில் அளித்திருக்கிறோம்.

படியுங்கள்… நமது எதிர்மறை எண்ணங்களுக்கு இந்த பதிவு விடையாக அமைந்தால் நல்லதே...

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது.

இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு, தென் மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் , பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும் , குஜராத்தில் உள்ள சில மெட்டலர்ஜி நிறுவனங்களுக்கும் சிவப்பு பாஸ்பரஸ் விற்பனையை கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். நல்ல சம்பளம், அதை விட ராஜ மரியாதை, கேட்ட உதவிகள் கேட்பதற்கு முன் வழங்கும் நிறுவனம் , பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து கொள்ளுமளவிற்கு பெயர் சம்பாதித்துக்கொண்ட, லாபத்தில் கொழிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அடையாள அட்டை என ஒரு பெருமிதத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

வழக்கமாக இதே ரயிலில் வருவதால் வேலை செய்யும் பேன்ட்ரி ஆர்டர்லிகளுடன் ஒரு சிநேகிதம் இருக்கத்தான் செய்தது .தேவையான இடத்தில் தேவையானவற்றை அவர்கள் தருவதும், புகை பிடிக்க பேன்ட்ரி கார் செல்வதும் எனக்கு பழக்கமாகிபோனது.

அப்படி புகைப்பிடிக்க சென்ற போதுதான் அவரை பார்த்தேன்.

ஆனந்தம் நல்லெண்ணெய் விளம்பரம் போட்ட கை வைக்காத பனியன் ,கிருதா வழியாக வழியும் எண்ணை, கால்சட்டை தெரியுமளவிற்கு தூக்கிகட்டிய லுங்கி , சரியாக சவரம் செய்யாத உலர்ந்த கன்னம், நட்புடன் பார்க்கும் விழிகள்.

இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே என்று தோணியது , வேறு எங்கே , மளிகைக்கடையில் மடித்து கொடுக்கும் மக்கள் இதே போல் தானே இருக்கிறார்கள் .

சரி , இவருக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி அருகே என்ன வேலை , இந்த கோலத்தில் இருக்கும் இந்த ஆள் கண்டிப்பாக ஏ சி டிக்கெட் வாங்க வாய்ப்பே இல்லை ,

ஆனால் நெடு நேரமாக இங்கு தான் இருக்கிறார் என்ற போது ஒரு சிறிய சந்தேகம் எட்டி பார்த்தது . இருந்தாலும் வெளியே வேடிக்கை பார்ப்பது போல் கதவருகே நின்றுகொண்டே சிகரெட் ஒன்றை பற்ற வைத்தேன் , இன்னும் அந்த ஓட்ட வைத்த புன்னகை அவரிடமிருந்தது .

ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை நெருங்கியபோது அவரிடம் ஒரு சின்ன பதட்டத்தை காண முடிந்தது , அப்போதுதான் கவனித்தேன் அவர் அருகில் இருக்கும் ஒரு சாக்கு மூட்டையை ,

எனக்கு இப்போது தெளிவாக புரிந்தது , குப்பை பொறுக்கும் ஆள் தான் அவர் . உடன் ஒரு சின்ன கோபமும் வந்தது , இப்படி இவர்களை ஏ சி பெட்டிகளில் அனுமதித்தால் , ஏதேனும் களவு போய் விட வாய்ப்புகள் அதிகமாயிற்றே , வரட்டும் அந்த டி டி ஆர் என்ற நினைத்துக்கொண்டே மீண்டும் அவரை நோட்டமிட ஆரம்பித்தேன் .

இது எனக்கு தேவையில்லாத வேலை தான் என்றாலும், அவர் முகத்தில் தெரிந்த அந்த அம்மாஞ்சி களையும், கண்களில் இருந்த சிநேக பார்வையும் எண்ணை அவரிடம் பேச சொல்லி தூண்டியது.

“என்னங்க ! ஈரோட்டுல இறங்குறீங்களா?”

“இல்ல சார், நான் பாம்பே வரைக்கும் வர்றேன், இங்க இறங்கி சில்ர வேலைகளே முடிச்சிறனும்!”

“ஒ ,அப்ப பாம்பே வர்றீங்களா !”

“ஆமா சார் ! நீங்க பம்பாய் தான் போறீகளா !” பாமரத்தனமாக கேட்டார்

“ஆமாங்க !” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது ரயில், நிலையத்தை அடைந்தது உடன் அவர் இறங்கி கொண்டார் , சாக்கு மூட்டையை தோளில் போட்டுகொண்டு ஒரு கையால் இன்னொரு முனையை பிடித்துக்கொண்டார் .

அது அவர் தோளில் தொய்வாகவும் குப்பைகளை போடுவதற்கு ஏதுவாக திறந்த நிலையிலும் இருந்தது. சட சட வென பொறுக்க ஆரம்பித்தார்.

ரயில் நின்ற பத்து நிமிடங்களில் அவர் ஓட்டமும் நடையுமாக மொத்த பிளாட்பாரத்தையும் அலசிவிட்டு மறுபடியும் நான் இருந்த பெட்டிக்கே வந்து நின்றுகொண்டார். வண்டி கிளம்பியது.

இம்முறை நான் கேட்டுவிடுவது என்று தீர்மானித்து கொண்டேன் . இம்மாதிரி கேள்விகளை ஆரம்பிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்கிறது...

“நீங்க ஏன் ஏ.சி.ல ஏறுறீங்க, ஜெனரல் கம்பார்ட்மெண்டுல வரலாமில்ல ”

“இல்ல சார் , அங்க இருந்த நமக்கு தேவையான ஐட்டம் கிடைக்காது, அதனால தான் இங்க இருக்கேன். ஆனா டிக்கெட் வச்சிருக்கேன். எனக்கு சீட் சிலிப்பர் கிளாஸ்ல இருக்கு” என்று கொஞ்சம் படபடப்புடன் பேசினார்

“சாரு பாங்க்ல வேல செய்திகளோ ” கேள்வி கேட்டார் சற்று எதிர்பார்ப்புடன்,

“இல்ல ,ஏன் கேக்குறீங்க ” என்றேன்

“ஒரு சின்ன விஷயம் கேக்கணும், இந்த டாக்ஸ் எப்பிடி கட்டுறதுன்னு கேக்கலாம்னு தான் கேட்டேன் ”

சிரிப்பு வந்தது எனக்கு...

“டாக்ஸ் கட்டுறதுக்கு ஆடிட்டர பாக்கணும் , பேங்க்ல வேலை செய்றவங்களுக்கும் டாக்ஸ்க்கும் சம்பந்தமில்ல” என்ன ஒரு அப்பாவியாக இருக்கிறார் ,

இது தான் இந்திய மக்களின் நிலைமை என்ற அளவிற்கு என் சிந்தனை சென்று கொண்டிருந்த போது தான் என் ஆறாம் அறிவு டக் என விழித்து அந்த சந்தேகத்தை இடி போல் இறக்கியது.

“குப்பை பொறுக்கும் ஒருவன் எதற்காக டாக்ஸ் கட்டவேண்டும் என்கிறான்” என்ற எண்ணம் தான் முன்னதாக நான் ஏய்த ஏளனத்தில் கொஞ்சம் வருத்தமாகி அவர் நகர்ந்து கொண்டிருந்த வேளையில் நான் அழைத்தேன்.

“அண்ணே, ஒரு நிமிஷம்” என் வாய் தானா அவரை அண்ணா என்றது. எல்லாம் காசு பண்ணும் இல்லை இல்லை டாக்ஸ் பண்ணும் வேலை .

திரும்ப அருகில் வந்தவரிடம் “யாருக்கு டாக்ஸ் கட்டனும்” என்றேன்

“எனக்குதான் சார் , அதில்லாம நான் பேங்க் பத்தி கேட்டது டாக்ஸ் கொறைக்க என்ன முதலீடு செய்யலாம்னு கேக்கதான் சார் ” என்று சொல்லும்போதே என் தலை சுற்ற ஆரம்பித்தது ,

ரயில் இரைச்சலின் நடுவேயும் என் உள் மணம் என்னை அசிங்கமாக திட்டியது தெளிவாக கேட்டது .இந்த நேரத்தில் நான் என்ன பேசினாலும் உளறுவது போலத்தான் இருக்கும் ,எனவே சற்று நேரம் மௌனம் சாதித்தேன்

“அண்ணே , டாக்ஸ் கட்டுற அளவுக்கு என்ன தொழில் பண்றீங்க ” அவர் செய்யும் வேலையை இப்போதுதான் பார்த்தேன் , என்றாலும் குப்பை பொறுக்குற நீங்க ஏன் டாக்ஸ் கட்டுறீங்க என்று கேட்பது என் உள் மன பொறாமையையும் வஞ்சத்தையும் காட்டிவிடும் என்று அப்படி ஒரு கேள்வியை கேட்டேன் .

அண்ணன் ஒரு முதலாளி, அவரிடம் மொத்தம் ஏழு தொழிலாளிகள் உண்டு, அவர்களுக்கு இவர் டிக்கெட் எடுத்து, சாப்பிட பணம் கொடுத்து விடுவார், வேலை என்னவென்றால் கன்னியா குமரியில் இருந்து ரயிலில் ஏறி , முதல் வகுப்பு பெட்டியருகே நின்று கொள்ள வேண்டும் , வண்டி எந்த சிக்னலுக்காக நின்றாலும் இறங்கி அலுமினியம் பாயில் தாளை மட்டும் பொறுக்க வேண்டும்.

முதல் வகுப்பில் தான் குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது, ஆனால் மற்ற வகுப்பு பயணிகள் சாப்பிட்டு விட்டு எறிந்து விடுவார்கள் , எனவே தான் முதல் வகுப்பு முன் நின்றே பயணம் செய்கிறார்கள் .

இவர்களின் இலக்கு ஒரு ரயில் போய் வருவதற்குள் நூறு கிலோ அலுமினியம் பாயில் திரட்டுவது...

அதாவது நான்கு நாட்கள் (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூபாய் நாலாயிரம் (ரூ 4,000), எட்டு பேரின் சம்பாத்தியம் முப்பத்தி ரெண்டாயிரம் (ரூ 32,000), மாத சம்பாத்தியம் ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் (ரூ 2,40,000) ,செலவு நாப்பதாயிரம் (- ரூ 40,000)) , வருமானம் இரண்டு லட்சம் (ரூ 2,00,000) , வருட வருமானம் இருபத்திநாலு லட்சம் (ரூ 24,00,000) .

இது கன்யாகுமரி – பம்பாய் வழித்தடத்தில் மட்டும் , இன்னும் இது போல் மூன்று வழித்தடங்கள் உள்ளன .
மலைத்து நின்றேன்.

கார்பொரேட் நிறுவனத்தில் அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி அடிமை போல் வேலை செய்யும் நான் ஏ சி பெட்டியில் சென்று கொண்டு எகத்தாளமிட்டு கொண்டிருக்கிறேன்.

ஆனால் சின்ன ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து , கௌரவம் பார்க்காமல், கர்வமில்லாமல் உழைத்து என்னை விட பல மடங்கு லாபம் பார்ப்பவர் பெட்டிக்கு வெளியே பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து வருகிறார்.

அன்று நான் இருந்த ஏ சி பெட்டி கொதிக்கும் நெருப்பை கொட்டுவது போல் இருந்தது.

எந்த தொழில் செய்கிறோம் என்பது அல்ல விஷயம், அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

“சார் ! எனக்கு தெரிஞ்ச நண்பரோட போன் நம்பர் இது ,இவரு முதலீடு செய்றத பத்தி உங்களுக்கு உதவி செய்வாரு சார் ” என்று கூறி விடைபெற்றேன்.

இம்முறை என்னையும் அறியாமல் அவரை சார் என்று அழைத்தேன்.
=================================================================
பதிவை படித்ததும் அதை உடனடியாக நமது வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினோம். பதிவாசிரியர் திரு.பார்த்தசாரதிக்கு மின்னஞ்சல் செய்தோம். இரண்டு நாட்களில் நம்மை அலைபேசியில் தொடர்பு கொண்டார். முதலில் அவருக்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டோம். பின்னர் மேற்படி பதிவை நமது தளத்தில் வெளியிட அனுமதி கேட்டோம். மகிழ்ச்சியுடன் இசைந்தார்.

மேற்படி பதிவு உணர்த்தும் நீதியை பற்றி குறிப்பிடவேண்டுமானால்…

ஒன்று : உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.

இரண்டு : திருடுவது, பொய் சொல்வது இரண்டும் இல்லாத எந்த தொழிலும் இந்த உலகில் கேவலமில்லை.

ஒரு தொழிலில் இந்த இரண்டில் ஒன்று இருந்தால் கூட அதை விட கேவலமான தொழில் இந்த உலகில் இல்லை.

மூன்று : எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம்ரயிலில் கிடைத்த பாடம்...பளார் பதிவு...

Comments