ஒரு சிறுவன் வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். அவனுக்கோ சாப்பாடு கேட்க ரொம்பக் கூச்சம்.
'கொ... கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?' தயக்கத்துடன் கேட்டான்.
அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனித்தாள்.
உள்ளே போய் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தாள்.
பாலைக் குடித்துப் பசியாற்றிய சிறுவன் கேட்டான், `நான் எவ்வளவு கடன்பட்டிருக்கேன்?'
`கடனா? அப்படியொன்றுமில்லை. அன்பான செயலுக்கு விலை இல்லை என அம்மா சொல்லியிருக்கிறார்...', அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
'ரொம்ப ரொம்ப நன்றி...' சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.
ஆண்டுகள் கழிந்தன. அந்த சிறுவன் நகரிலேயே பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனை வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்தப் பெண்ணின் ஊரைப் படித்ததும் அவருக்குள் சின்ன மின்னல். விரைவாக அறைக்குப் போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளேதான். தனது பசியாற்றிய நல்ல உள்ளம் படைத்தவள்.
அன்று முதல் தனது அத்தனை உழைப்பையும் செலுத்தி அவளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்குப் பின் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படிக் கட்டப் போகிறேனோ எனும் பதற்றத்துடன் அதைப் பிரித்த அவள் திகைத்துப் போனாள்.
அந்த பில்லின் கடைசியில் எழுதப்பட்டிருந்தது, `ஒரு கப் பாலில் உங்கள் கடன் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்.' அவளுடைய கண்கள் கசிந்தன.
மனிதனுக்கு இருக்க வேண்டிய மகத்தான குணாதிசயங்களில் ஒன்று நன்றி சொல்லுதல்.
அமெரிக்காவில் நீங்கள் காரில் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் உங்களை முந்திச் செல்ல நீங்கள் அவருக்கு வழிவிட்டால் அவர் உங்களுக்கு 'நன்றி' சொல்லி விட்டுத்தான் போவார். சாலையில் ஒருவர் கடக்க நீங்கள் வண்டியை நிறுத்தினால் அவர் 'நன்றி' சொல்வார். கடையில் ஒரு பொருள் வாங்கும் போது கூட கடைக்காரருக்கு `நன்றி' சொல்வார்கள்.
நன்றி சொல்லும் வழக்கம் அவர்களிடம் ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. நல்லவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம், தப்பில்லை.
Comments