நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்--

🌺🌺🌺நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்--

🌺⏩நமது வாய் பேசுகிறதோ இல்லையோ உள்ளே ஒரு 'ரன்னிங் கமெண்டரி' நடந்து கொண்டே இருக்கிறது. நமக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ எல்லாவற்றைப் பற்றியும் கருத்து கூறும் விமரிசகராக நம் மனம் இருக்கிறது. பெரும்பாலும் அந்தப் பேச்சு வெளியே கேட்பதில்லை என்ற ஒரே காரணத்தால் நமது கௌரவம் காப்பாற்றப் படுகிறது. சண்டை சச்சரவுகள் தவிர்க்கப்படுகின்றன. காது கொடுத்துக் கேட்க நமக்குத் தோதான ஒரு நபர் இருந்தால் நாம் அதை வாய் விட்டுச் சொல்வதும் உண்டு. 

🌺⏩பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு சராசரி மனிதரின் உள்ளே நடக்கும் உரையாடலை ஒரு ஐந்து நிமிடம் தொடர்ந்து கேட்கலாமா? "இந்தக் கிழத்துக்கு இந்த வயசில் ஜீன்ஸ் தேவையா? நிக்க முடியாமல் தள்ளாடுகிறது. ஆனால் ஜீன்ஸ் கேட்கிறது....ஐயோ அந்த குண்டான ஆள் நம்ம சீட்டைப் பார்த்துட்டே வர்றான். பக்கத்தில் உட்கார்ந்தால் நசுக்கிடுவானே...உட்கார்ந்துட்டான்யா உட்கார்ந்துட்டான்...விட்டா மடியில் உக்காந்துக்குவான்...நியாயமா பார்த்தா இவன் ரெண்டு டிக்கெட் வாங்கணும்...அந்த சிவப்புச் சட்டைக்காரன் அந்தப் பெண்ணையே பார்த்துகிட்டு இருக்கிறது ஏன்னு தெரியலையே...ஏதாவது கனெக்ஷன் இருக்குமோ... இருக்கும்....அடடா சர்க்கஸ் அந்த மைதானத்துல வர்றதா அந்தப் போஸ்டர்ல இருக்கே....ஊம் அந்த மைதானத்துக்குப் பக்கத்துல ஏழு செண்ட் இடத்துல அம்சமா ஒரு வீடு நமக்கும் இருந்தது. அப்பா அதை அநியாயத்துக்கு கம்மி ரேட்டில் அப்போ வித்தார். இன்னைக்கு இருந்திருந்தா அது ஒரு கோடிக்குப் போயிருக்கும்...அப்ப கொஞ்சம் ஸ்டிராங்கா நின்னு அவரை விக்க விட்டு இருக்கக் கூடாது...கொடுத்து வைக்கல...இப்படி அத்தனை கூட்டமும் ஒரே பஸ்ஸ¤ல ஏன் ஏறுறாங்கன்னே புரியல.. இப்படி புளிமூட்டை மாதிரி அடைச்சுட்டு போகாட்டி என்ன..."

🌺⏩ஒரு நாள் முழுவதும் மனதில் ஓடும் இது போன்ற சிந்தனைகளை நாம் சற்று ஆராய்வோமா? உதாரணத்துக்கு இந்த பஸ் பயணியின் சிந்தனைகளையே எடுத்துக் கொள்ளலாம்.

🌺⏩அந்தக் கிழவன் ஜீன்ஸ் போட்டால் இந்த மனிதருக்கு என்ன நஷ்டம்?. சிவப்பு சட்டைக்காரனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் கனெக்ஷன் இருந்தால் என்ன, இல்லா விட்டால் இந்த மனிதருக்கு என்ன? குண்டாக இருந்த சகபயணியைக் கிண்டல் செய்வதும், அருகில் அமர்வதைக் கண்டு எரிச்சலடைவதும், கும்பலாக பஸ்ஸில் ஏறும் மனிதர்களைக் கண்டு சலிப்படைவதும் இயற்கையாக நடப்பதை சகிக்க முடியாத செய்கை அல்லவா? என்றைக்கோ விற்றுப் போன இடம் இன்று இருந்திருந்தால் என்ன விலை போயிருக்கும், அன்று தடுத்திருக்க வேண்டும் என்று எண்ணி வருந்துவதால் பயன் உண்டா? கால கடிகாரத்தை யாரால் திருப்பி வைக்க முடியும்?

🌺⏩ஐந்து நிமிடங்களில் மட்டும் மனதில் இப்படி கமெண்டரி ஓடிக் கொண்டிருந்தால் குடிமுழுகி விடாது. ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இந்த ஐந்து நிமிட கமெண்டரி போலத் தான் விழித்திருக்கும் மீதி நேரங்களிலும் மனதினுள் கமெண்டரி ஓடிக் கொண்டே இருக்கிறது. நாள் முழுவதும் இப்படி யாருக்கும் பலனளிக்காத விஷயங்களையே மனம் சொல்லிக் கொண்டு இருந்தால் உபயோகமான விஷயங்களை நினைக்ககூட அந்த மனத்திற்கு நேரம் ஏது? இந்த வகை கமெண்டரியில் மற்றவர் எப்படி இருக்க வேண்டும், ஆனால் எப்படி இருக்கிறார்கள் என்ற விமரிசனம், நாம் அப்படி இருந்திருக்க வேண்டும், இப்படி செய்திருக்க வேண்டும் என்ற புலம்பல், மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் அதீத ஈடுபாடு என்று உபயோகமில்லாத குப்பைகளையே மனம் கிளறிக் கொண்டு இருக்கிறது. காணும் ஒவ்வொன்றைப் பற்றியும் கருத்து சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் மனம் இருப்பது வேடிக்கையான உண்மை. 

🌺⏩எண்ணங்களே செயல்களின் தொடக்க நிலை அல்லது விதைகள். அவைகளே சொல்லாக செயலாக மாறுகின்றன. மேலே சொன்னது போன்ற சிந்தனைகளே மனதில் சதா ஓடிக் கொண்டு இருக்குமானால் விளைவுகள் எப்படி உயர்ந்ததாகவோ, உபயோகமுள்ளதாகவோ இருக்க முடியும்? மற்றவர்களிடம் குறை காணுதல், யார் யார் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்தல், கடந்த காலத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் புலம்புதல், ஒன்றுமில்லாத நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் போன்றவை அல்லவா விளவுகளாக இருக்க முடியும். 

🌺⏩எனவே உள்ளே உள்ள மன விமரிசகரின் வாயை அடையுங்கள். அது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. கால காலமாக கமெண்ட் செய்தே அல்லது புலம்பியே பழக்கப்பட்ட அந்த விமரிசகரை மௌனமாக்குவதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டி வரும். ஆனால் அது முடியாததல்ல.

🌺⏩ அந்த விமரிசகர் வேறு ஒரு ஆள் என்று எண்ணி அவரை உங்களில் இருந்து விலக்கி வைத்து கண்காணியுங்கள். உபயோகமில்லாத கமெண்ட் செய்து கொண்டிருக்கையில் கையும் களவுமாகப் பிடியுங்கள். சொல்லிக் கொண்டிருக்கும் வாக்கியத்தை முடிக்கக் கூட விடாதீர்கள். உடனடியாக நல்ல பயனுள்ள விஷயங்களுக்கு அவர் பார்வையைத் திருப்புங்கள். வார்த்தைகளாக வெளி வருவதில் மட்டுமல்லாமல் மனதளவில் பயனில்லாத எண்ணமாக, விமரிசனமாக எழும் போதே கவனமாக இருந்து அழிக்கப் பழகினால் அது மனதின் களைகளைப் பிடுங்கி எறிவது போன்ற உயர்ந்த உருப்படியான செயல். விடாமுயற்சியுடன் இப்படி கவனத்துடன் மனதைக் கமெண்ட அடிக்கவோ புலம்பவோ அனுமதிக்கா விட்டால் சிறிது சிறிதாக மனம் இந்தக் கெட்ட பழக்கத்தை விட்டொழிக்க ஆரம்பிக்கும். 

🌺⏩உங்கள் உறுதியைப் பொறுத்த அளவு நீங்கள் சிறிது சிறிதாக வெற்றி பெறுவீர்கள்.
--

Comments