அரும்மருந்து
சீடன் ஒருவன் தனது குருவிடம் சென்று நான் இனி இறைவனை வணங்கப்போவதில்லை என்று கூறி தன்னை குருகுலதிலிருந்து விடுவிக்க வேண்டினான். ஏன் இப்படி ஒரு முடிவு எனக்கேட்டார், குரு. பதிலளித்த சீடன், நான் இறைவனை வணங்குவதால் எனக்கு எந்த பயனுமில்லை, இப்படி இருக்க நான் ஏன் வணங்க வேண்டும் என்று வினா எழுப்பினான்..
அதற்கு குரு, அன்புச் சீடனே, இறைவன் என்பவர் ஓர் அரும்மருந்து. எடுத்துக்காட்டாக, உனக்கு ஜீரனக்கோளாறினால் வயிற்று வலி ஏற்பட்டால் ஒன்று நீ மருந்து உட்கொண்டு வயிற்றுவலியை போக்கிக்கொள்ளலாம், இல்லையெனில் அப்படியே விட்டுவிட்டால் ஓரிரு நாளில் அதுவாகவே சரியாகிவிடும்.
அதுபோன்று நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நாம் துன்ப இன்பங்களை அனுபவிக்கிறோம், இருந்தாலும் கூட இறைவனை வணங்குவதால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் விரைவில் முடிவிற்கு வரும். மேலும் நாம் இறைவனை வணங்குவதால் இறைவனுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை, ஏனெனில் கடையில் இருக்கும் மருந்தானது எப்போதும் தனது சக்தியினை தன்னகத்தே பெற்றிருக்கும், அதை நாம் வாங்கி பயன்படுத்தினாலும் சரி இல்லை அதனை குப்பையில் போட்டாலும் சரி. ஆகவே இறைவன் என்கிற அரும்மருந்தினை பயன்படுத்திக்கொள்வது நமது கையில்தான் உள்ளது என தனது விளக்கத்தினை முடித்தார் குரு.
நேசமிகு நண்பர்களே, நாம் இறைவனை வணங்குவதில் பலனை எதிர்பாராது இறைவழிபாடானது நமது உரிமை என்று மேற்கொள்வோமானால் அதனுடைய பலன் நிச்சயம் நமது உயிருக்கு உண்டு. ஆகவே இறைவன் என்கிற அரும்மருந்தினை முறைப்படி பயன்படுத்திக்கொள்வோமாக.
Comments