ஏழுமலைவாசன் – 1

ஏழுமலைவாசன் – 1
இந்த உலகிற்கு சீனிவாசன் வருவதற்கு காரணமே நாரதமுனிவர் தான். இவர் ஓரிடத்தில் இருக்க மாட்டார். "நாரம்' என்றால் "தண்ணீர்' . ஆம்... பசியாலும், களைப்பாலும் மயக்கமடைந்தவனின் முகத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளித்தால் அவன் உணர்வு பெற்றுவிடுவான். கொஞ்சம் தண்ணீரைக் குடிக்கச் செய்துவிட்டால் போகும் உயிர் திரும்பி விடும். நாரதரும் அப்படியே. கலகங்கள் செய்தாவது உயிர்களுக்கு நன்மை தருபவர் அவர். அதனால் தான், "தண்ணீர் போல் உயிரூட்டுபவர்' என்ற பொருளில் அவரது திருநாமம் அமைந்தது. தேவர்களின் நல்வாழ்வுக்காக, அசுரர்களிடையே கலகத்தை உருவாக்குவார். சில சமயங்களில் அசுரர்களை இக்கட்டில் சிக்கவைக்கும் உபாயங்களை சமயோஜிதமாக செய்து விடுவார். அந்தளவுக்கு அவர் ஒரு தைரியசாலி.
பிரம்மனின் புத்திரர் இவர். எந்த நேரமும் "நாராயணா' என்று மந்திரம் சொல்பவர். அவர் ஒரு நாள் தன் தந்தையைக் காண பிரம்மலோகம் வந்தார். அப்போது, இந்திரனின் தலைமையில் தேவர்களும் தங்கள் குறைகளை சொல்ல அங்கு வந்திருந்தனர். ஆனால், சரஸ்வதியின் வீணாகானம் கேட்ட அவர்கள் மெய்மறந்து நின்று கொண்டிருந்தனர்.
நாரதர் பிரம்மாவிடம், ""தந்தையே! திருமால் கிருஷ்ண அவதாரம் எடுத்த பிறகு பூமியில் மீண்டும் பிறக்கவில்லை. இதனால் பாவிகள் உலகத்தில் அதிகரித்துவிட்டனர். இதற்கு மூல காரணம் செல்வம் சேர்க்கும் ஆசை. செல்வ ஆசை மண்ணாசையையும், பொன்னாசையையும் தூண்டுகிறது. உலக மக்களில் நல்லவர்களை காப்பாற்றவும், பாவிகளை சீர்திருத்தவும், மீண்டும் அவர் அவதாரம் எடுத்தால் தான் பூலோகம் பிழைக்கும். எனவே, திருமாலை இவ்வுலகில் பிறக்க செய்வதற்குரிய கோரிக்கையை, தாங்கள் தான் அவரிடம் எடுத்து செல்ல வேண்டும். படைத்த உங்களுக்கு உயிர்களை பாதுகாப்பதிலும் பொறுப்பு இருக்கிறதல்லவா,'' என்றார். தொடரும்

Comments