தசாவதாரம் 1 மச்சாவதாரம்

தசாவதாரம்
1 மச்சாவதாரம்
படைக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மன். பிரம்மன் உறங்கும் காலமே உலகத்தின் பிரளய காலமாகும்.
மீண்டும் அவர் விழிக்கும்போது புது உலகம் சிருஷ்டிக்கப்படும். அவர் ஒரு சமயம் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அவர் வாயிலிருந்து வேதங்கள் கீழே விழுந்து விட்டன.
அச் சமயத்தில், குதிரை முகம் கொண்ட ஹயக்கிரீவன் என்னும் அசுரன் வேதங்களை அபகரித்துக்கொண்டான். வேதங்களின் உதவியால்தான் பிரம்மன் படைக்கும் தொழிலைச் செய்து வருகிறார். அதைக் கெடுக்கவே ஹயக்கிரீவன் அவ்வாறு செய்தான்.
அப்போது மகாவிஷ்ணுவை நோக்கி, சத்தியவிரதன் என்ற ராஜரிஷி ( ராஜரிஷி = அரச முனிவர் ), நீரையே உணவாகக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார்.
அவர் பூஜைக்காக நதி நீரைக் கையில் அள்ளும்போது, கையில் ஒரு சிறு மீன் காணப்பட்டது.
அந்த மீன் மகாவிஷ்ணுதான் என்பதை அறியாத முனிவர், அந்த மீனை மீண்டும் நீரில் விட முயலும்போது, அந்த மீன், ” மகரிஷியே, என்னை நீரில் விடாதீர்கள். பெரிய மீன்கள் என்னை இரையாக்கி விடும். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று வேண்டியது.
அதன்படி முனிவர் அந்த மீனைத் தன கமண்டலத்தில் போட்டுக்கொண்டார். சிறிது நேரத்தில் அக்கமண்டலம் அளவுக்கு மீன் வளர்ந்து விட்டது.
பிறகு, அதை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டார். அதனுள்ளும் பெரிதாக வளர்ந்து விட்டது. பிறகு குளத்திலும், பெரிய ஏரியிலும் விட்டார்.
அது மிகப் பெரிதாக வளர்ந்து விடவே, இறுதியில், சமுத்திரத்தில் கொண்டுபோய் விட முயலும்போது, ” மகரிஷியே, இந்தச் சமுத்திரத்தில் பெரிய திமிங்கலம் இருக்குமே. அது என்னைத் தின்று விடுமே ” என்று கேட்டது.
அந்த மீன் மகாவிஷ்ணுதான் என்பதை உணர்ந்துகொண்ட முனிவர், அவரிடம், ” தாங்கள் இந்த உருவம் பெற்றமைக்கும், என்னிடம் வந்ததற்கும் காரணம் என்ன ? ” என்று கேட்டார்.
“மகரிஷியே, பிரம்மன் உறக்கத்தில் இருக்கிறார். ஏழாவது நாளில் சகல லோகங்களும் பிரளயம் ஏற்பட்டு மூழ்கப்போகின்றன. அச் சமயம் பெரிய ஓடம் ஒன்று இங்கே வரும். அதில், சப்த ரிஷிகளோடு ( சப்த ரிஷிகள் = முக்கியமான ஏழு முனிவர்கள் ) , நீங்களும், மூலிகை வித்துக்களையும் ஓடத்தில் ஏற்றிக்கொண்டு, பிரளய வெள்ளத்தில் சஞ்சரிப்பீர்கள். அப்போது, பிரம்மனின் உறக்கம் முடியும்வரை என் வாயுவால் ஓடம் கவிழ்ந்து விடாதவாறு உங்களைக் காப்பாற்றி வருவேன்.
அப்போது நீங்கள் அதன் காரணத்தையும், என் மகிமையையும் அறிவீர்கள்” என்று கூறிவிட்டு மறைந்தார்.
அதன்பின்னர், மச்ச உருவில் தோன்றிய மகாவிஷ்ணுவை நோக்கி, சத்திய விரதன் தியானம் செய்து கொண்டிருந்தார். ஏழாவது நாளில், பெரிய பிரளயம் ( பிரளயம் = மிகப் பெரிய வெள்ளம் ) ஏற்பட்டது. அப்போது, பெரியதோர் ஓடம் அங்கே வந்தது.
மகாவிஷ்ணு கூறியவாறே, சப்த ரிஷிகளோடு மூலிகை வித்துக்களையும் அந்த ஓடத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது, வாயுவால் ஓடம் அலைக்கழிக்கப்பட்டது.
அப்போது மச்சமூர்த்தி தோன்றிப் படகைத் தன் கொம்புடன் சேர்த்து ஒரு பாம்பால் இறுகக் கட்டி ஓடம் கவிழ்ந்து விடாதவாறு இழுத்துச் சென்றார்.
பிறகு, மகாவிஷ்ணு மகரிஷிக்கு மச்ச புராணத்தை உபதேசித்தார். பிரம்மனும் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தார்.
அடுத்து சிருஷ்டித் தொழில் செய்ய வேண்டும். அப்போதுதான் வேதங்கள் காணாமல் போனது பிரம்மனுக்குத் தெரிந்தது. அதன்பின், ஹயக்கிரீவன் வேதங்களைக் கொண்டுபோய்த் தன் வாயில் மறைத்து வைத்திருப்பதை அறிந்த மச்சமூர்த்தி, ஹயக்கிரீவனோடு போரிட்டு அவனைக் கொன்று, வேதங்களை மீட்டு வந்து பிரம்மனிடம் கொடுத்தார்.
பிரம்மனும், தடங்கலின்றித் தன் சிருஷ்டித் தொழிலைத் தொடங்கினார்.

Comments