புத்தகங்களைக் கொண்டாடுவோம் !

புத்தகங்களைக் கொண்டாடுவோம் !
நான் டைனோசர்கள் காலத்தில் பிறக்கவில்லை. திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்ததில்லை. புத்தர் முதன்முதலாக சுஜாதையிடம் பிட்சை பெற்றதை நேரில் பார்த்த்தில்லை. ஏசுநாதர் சிலுவையில் அறைப்பட்டபோது நிகழ்ந்தவற்றை, சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்டதை, ஆர்கிமிடிஸ் புதிய கண்டுபிடிப்பின் உற்சாகத்தில் நிர்வாணமாக ஓடியதை,  கிரஹாம் பெல் முதன்முதலாக ஹலோ சொன்னதை, போப்பாண்டவர் உத்தரவிற்கிணங்க மைக்கேலேஞ்சலோ சிஸ்டைன் தேவாலயத்தின் பிரும்மாண்டமான உத்தரம் முழுக்க ஒற்றையாளாய் படம் வரைந்து தள்ளியதை, பாபர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் வாழ்க்கை வரலாறான பாபர் நாமாவை எழுதியதை, நபிகள் நாயகம் மெக்காவிலிருந்து மெதினாவிற்குப் பயணித்ததை, இளம் மார்க்சும் ஜென்னியும் காதலித்ததை, நாளந்தா பல்கலைக்கழகத்தில் காஞ்சிபுரத்துக்காரர் பேராசிரியராக இருந்ததை, அசோகன் சாரநாத்தின் பெரும்பாறையில் புத்தரின் போதனைகளைப் பொறிக்கச் சொன்னதை, மார்க்கோ போலோ மதுரை வீதிகளில் சுற்றித் திரிந்ததை, பரஞ்ஜோதி வாதாபியில் போர் புரிந்ததை, பென்னி குக் பெரியார் அணை கட்டியதை, லிங்கன் கெட்டிஸ்பெர்க்கில் உரையாற்றியதை, கர்னல் எவரெஸ்ட் இந்தியாவை அளந்து வரைபடம் தயாரித்ததை, காந்தி தென்னாப்பிரிக்காவில் ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்டதை, ராண்ட்ஜன் மிகத் தற்செயலாக எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்ததை, கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்ததை, இந்தியாவைப் பற்றி எதுவுமே அறியாத ராட்கிளிஃப்  கோடுகளாகப் போட்டு என் நாட்டைப் பிரித்ததை, வியட்நாம் போரை, பிளாரி யுத்தத்தை, ராபோஸ்பியரின் தலை கில்லட்டினில் வெட்டப்பட்டதை, முஸோலினி ரயிலில் வந்து இத்தாலியின் சர்வாதிகாரியாகப் பதவியேற்றதை, புரந்தரதாஸர் கர்னாடக சங்கீதத்திற்கு பாலபாடங்களை உருவாக்கியதை,  தான்ஸேன் தர்பாரி கானடா ராகத்தைக் கண்டுபிடித்ததை, தாரா ஷிகோ உபநிஷதங்களை பாரசீக மொழியில் மொழிபெயர்த்ததை, கறுப்பர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமராததற்காக ரோஸா பார்க்ஸ் தாக்கப் பட்டதை, வெள்ளையர்கள் மதராஸபட்டினத்தை விலைக்கு வாங்கியதை, ரஷ்யாவின் ஸ்தெப்பி புல்வெளிகளை, இரண்டாம் உலகப் போரின் பதுங்கு குழிகளை, பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதை, எதையுமே நான் நேரில், அருகிலிருந்து பார்த்த்தில்லை. ஆனாலும் இவை எல்லாவற்றைப் பற்றியும் ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் தெரியும். இந்த உலகப் புத்தகநாளில் இவற்றையெல்லாம் அறியச் செய்த, அறியச் செய்து கொண்டிருக்கிற அத்தனை புத்தகங்களுக்கும் என் நன்றி. இந்த நாளிலிருந்து புத்தகங்களோடு உறவாடப் போகும் புதிய வாசகர்களுக்கும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் உறவாடிக் கொண்டிருக்கும் சக புத்தகப் புழுக்களுக்கும் எனது வாழ்த்துகள் ! வாசிப்பை நேசிப்போம் !

Comments