திருவேங்கட மஹாத்மியம்

திருவேங்கட மஹாத்மியம்!! – நாரத முனிவர்
கலியுகத்தில் நிகழ்த்தினர் மாபெரும் யாகம்
காசியபர் முதலிய முனிபுங்கவர்கள் சேர்ந்து.

வேதகோஷம் ஓங்கி ஒலித்தது யாகசாலையில்
தேவரிஷி நாரதர் வந்தார் அந்த யாகசாலைக்கு.

“அவிர் பாகம் அளிக்கப் போவது யாருக்கு?” என
ஆர்வத்துடன் கேட்டார் முனிவர்களை நாரதர்.

“இன்னமும் முடிவு செய்யவில்லை அதனை
இருக்கிறதே காலஅவகாசம் அதற்கு” என்றனர்.

“சத்துவ குணமே முக்குணங்களில் உத்தமம்;
சத்துவ குணம் கொண்டவரைக் கண்டறிந்து,

பூர்த்தி செய்யுங்கள் உங்கள் யாகத்தை ” என்று
பற்ற வைத்தார் நாரதர் கலஹம் நடப்பதற்கு.

“இறைவன் குணத்தை ஆராயும் அளவிற்குத்
திறமை உள்ளவர் யார் உள்ளார் உலகினில்?”

தேர்வு செய்தனர் பிருகுவை பிற முனிவர்கள்;
தேர்வு செய்யவேண்டும் அவர் சத்துவ குணனை.

சத்திய லோகம் சென்றார் பிருகு முனிவர்;
பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார் பிரமன்.

சாவித்திரி, காயத்திரி தேவியருடன் இருந்தனர்
சரஸ்வதி தேவியும், திக்பாலகர்களும் குழுமி!

நின்று கொண்டே இருந்தார் பிருகு – அவரைக்
கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பிரமன்!

‘எத்தனை நேரம் தான் நிற்பது?” என்று எண்ணிச்
சத்தம் இன்றி அமர்ந்துவிட்டார் பிருகு முனிவர்.

அனுமதி பெறாமலேயே அமர்ந்த முனிவரை
அலட்சியம் செய்தார் பிரம தேவன் சபையில்

முனிவரை அலட்சியம் செய்த பிரமனுக்குக்
கனிவான சத்துவகுணம் இல்லவே இல்லை!
ஓம் நமோ நாராயணா !!
--------------------------------------

Comments