சட்டசபையில் நிறைவேற்றப்படும் விதி எண் 110 என்பது என்ன?

சட்டசபையில் நிறைவேற்றப்படும் விதி எண் 110 என்பது என்ன? அப்படி என்னதான் சொல்கின்றது இந்த விதி 110

அரசமைப்பு சட்டத்தின் 208-வது பிரிவு 1-வது உட்பிரிவின்படி இயற்றப் பெற்றவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள். இதில் மொத்தம் 23 அத்தியாயங்கள், 292 விதிகள் உள்ளன. விதிகளில் உட்பிரிவுகளும் உள்ளன. இந்த விதிகள்படிதான் சட்டப்பேரவை நடத்தப்படவேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதில் ஒன்றுதான் விதி-110. இது என்ன சொல்கிறது?

(1) பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப்பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் அனுமதியுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம்.
(2) அவ்வறிக்கையின் மீது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது.
(3) உள் விதி 1-இன் கீழ்அறிக்கையளிக்க விரும்பும் ஓர் அமைச்சர் எந்நாளில் அந்த அறிக்கை அளிக்க விரும்புகிறார் என்பதையும் பேரவைத் தலைவரின் பார்வைக்கு வைக்க அதன் பிரதி ஒன்றையும் முன்கூட்டியே சட்ட பேரவை செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.

நாம் அடிக்கடி ஊடகங்களில் படிக்கும், கேட்கும் விதி-110 இதுதான். இந்த விதி எந்த காரணத்திற்காக கொண்டுவரப்பட்டது என்றால் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனைக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது அப்பொருளைப்பற்றி உறுப்பினர்கள் விவாதித்தால் காலவிரயம் கூடும் அல்லது அப்பொருள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும் என அரசு கருதும் போது இந்த விதிப்படி அரசு பயன்படுத்த ஏதுவாக கொண்டுவரப்பட்டதுதான் விதி-110.

தினமும் சட்டப்பேரவை விதி-110ன் கீழ் திட்டங்களை அறிவிப்பதையே வழக்கமாக மாற்றிய பெருமை ஜெயலலிதா அவர்களையே சாரும். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறிவிடும். விதி என்று ஒன்று எதிலும் உருவாக்கினால் விதிவிலக்கு என்று உருவாவது இயல்பே. ஆனால் விதிவிலக்கையே நிரந்தர விதியாக மாற்றுவது நோக்கத்தையே சிதைத்துவிடும்.

இந்திய ஜனநாயகம் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு மக்களுக்காக திட்டங்களை தீட்டும்போது மக்களுடன் (மக்கள் பிரதிநிதியான சட்டப்பேரவை உறுப்பினர்களுடன்) கலந்து ஆலோசித்து – விவாதித்து முடிவெடுக்க மறுத்தால் ஜனநாயகம் எங்கே இருக்கிறது? மக்களுக்கான அரசாங்கம் எங்கே இருக்கிறது? 110-விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் உண்மையிலேயே மக்களுக்கு பயனுள்ள திட்டங்களாக இருந்தாலும் கூட அரசு சட்டப்பேரவையில் விவாதிக்கும் போதுதான் அத்திட்டம் மேன்மையுறும், மெருகேறும். முக்கியமாக ஜனநாயகம் காக்கப்படும்.

ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு, “110 விதியின் கீழ்தான் தினமும் அனைத்து திட்டங்களையும் அறிவிப்பேன்; அத்திட்டங்களைப் பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க மாட்டேன், அதுபற்றி யாரும் கேள்வி கேட்க கூடாது, நான் பதிலும் சொல்ல மாட்டேன்” என விதி விலக்கை விதியாக மாற்றி ஜனநாயகவாதி என்ற போர்வையில் சர்வாதிகாரியாக யார் செயல்பட்டாலும், மக்களாட்சி தத்துவத்தையே கேலிக்கூத்தாக்கி விடும். இப்படி ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டால் தமிழகத்தின் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது.

விதியில் 110-ல் மாற்றம் தேவை 110-விதியின் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் பற்றி பேரவை உறுப்பினர்கள் கேள்வி கேட்கவோ, விவாதிக்கவோ முடியாது என தற்போது விதி உள்ளது. இந்த விதியில் சில மாறுதல்களை கொண்டு வரவேண்டும். அதாவது விதி 110ன் கீழ் அறிவிப்பு-திட்டங்கள் அறிவித்தால் அன்றைய தினம் அதுபற்றி கேள்வி எழுப்பவோ விவாதிக்கவோ முடியாது எனவும் மறுநாள் இதை முதலாவதாக பேரவை உறுப்பினர்களின் விவாதத்திற்கு வைக்க வேண்டும் எனவும் திருத்தம் செய்யப்பட வேண்டும். மேலும் ஒரு கூட்டத்தொடரின் கடைசி நாளன்று 110-விதியின் கீழ் அறிவிப்பு செய்தால் அது பற்றி அன்றே விவாதம் நடத்தவும் விதிகளில் திருத்தம் செய்யப்படவேண்டும்.

இவண்
இளைஞர் கூட்டமைப்பு

Comments