தமிழகத்தில் 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் இன்றுடன் முடிகிறது.. 5 லட்சம் மாணவர்களின் கதி என்ன?

*தமிழகத்தில் 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் இன்றுடன் முடிகிறது.. 5 லட்சம் மாணவர்களின் கதி என்ன???*

சென்னை: தமிழகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் இன்றுடன் முடிவடைய உள்ளது. அங்கீகாரத்தை இழக்கும் பள்ளிகளின் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசு நிர்ணித்த விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச நில அளவு, பிற கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மே 31 ஆம் தேதி வரை செயல்படுவதற்கு பள்ளிக் கல்வித்துறை தாற்காலிக அங்கீகாரம் வழங்கியது. இதுதொடர்பாக 2015 ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரு அரசாணைகள் வெளியிடப்பட்டன.
இந்த அரசாணைகளை ரத்து செய்து, அங்கீகாரமில்லாத அனைத்துப் பள்ளிகளையும் 2015-16-ஆம் கல்வியாண்டின் இறுதிக்குள் மூடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்படும் மாணவர்களை அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு மாற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின் நேற்றைய விசாரணையின்போது அங்கீகாரத்தை இழக்கும் பள்ளிகளின் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து பாடம் நாராயணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிருப்தி தெரிவித்தார்.
இந்த வழக்கில் கடந்த விசாரணையின்போது, விதிமுறைகளின்படி போதிய கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு மைதானங்கள் இல்லாத பள்ளிகளுக்கு மே மாதம் 31ம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.
இருந்தும், இதுவரை 746 பள்ளிகள் விதிமுறைகளை நிறைவேற்றவில்லை என்று கூறும் பள்ளிக்கல்வித்துறை அந்த பள்ளிகள் எவை என்பது குறித்த பட்டியலை வெளியிடாதது ஏன் என கேள்வி எழுப்பினார். பள்ளிகள் திறப்பதற்கான நாட்கள் நெருங்கிவிட்ட நிலையில், அப்பட்டியலை உடனடியாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாட்டால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பாடம் நாராயணனின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஜூன் 1ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Comments