படைப்பு ஏன் நிகழ்கிறது?

படைப்பு ஏன் நிகழ்கிறது?

‘ஏன் எதற்கு எப்படி என்று கேள்! அப்போதுதான் உன் அறிவு விருத்தியாகும்.’ என அறிஞர்கள் பலர் கூறுவதைக் கேட்கிறோம். ஆனால், பிரபஞ்சம் குறித்தும் படைத்தல் குறித்தும் கேட்கப்படும் ‘ஏன்’ என்ற கேள்வி, நமக்கு இதுவரை எந்த பலனும் தரவில்லை என்பதையும் பார்க்கிறோம்! அப்படியென்றால் ‘ஏன்’ என்று கேட்கக் கூடாதா? சத்குருவிடம் இது ஏன் என்று கேட்டபோது…

சத்குரு:

ஏன் படைப்பு நிகழ்கிறது? உண்மையில் ‘படைப்பு’ என்று எதுவும் கிடையாது. எதுவும் புதிதாக உருவாக்கப்படுவதில்லை. அவையெல்லாம் சக்தியின் வெவ்வேறு வடிவ வெளிப்பாடுகள்தான். கடவுள் எங்கோ ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு அனைத்தையும் படைத்துக் கொண்டிருக்கவில்லை. சக்திதான் உயிர். சக்தி உயிர்ப்புடன் இல்லையென்றால், பிறகு அதில் எதுவுமே நிகழாமல், ஒரு செயலற்ற நிலையில் இருந்திருக்கும். ஆனால் சக்திதான் உயிர், எனவே அது எண்ணிலடங்காத வடிவங்களை எடுக்க முடியும். இது தொடர்ந்து நிகழ்கிறது.
பிரபஞ்சத்தைப் பற்றிய எந்தவொரு கேள்வியும் அர்த்தமற்றது, ஏனென்றால் அனைத்து கேள்விகளுமே ஒரு வட்டத்துக்குட்பட்டுதான் இருக்கின்றன. ஒரு தீச்சுடர் எரிந்தால் கூட, ஒவ்வொரு கணமும் அது பல வடிவங்களை எடுக்கிறது. ஏனென்றால் எந்த ஒரு உயிர்ப்பான சக்தியையும் அசைவற்ற நிலையில் வைத்திருக்க முடியாது. அது எப்போதுமே பற்பல வடிவங்களை எடுத்துக் கொண்டே இருக்கும். அவை தோன்றியும், மறைந்து கொண்டும், எப்போதும் மாறிக் கொண்டும் இருக்கும். ஏன்? இதில் உண்மையில் எந்த ‘ஏன்’ என்பதும் கிடையாது. அது அப்படித்தான். இதுதான் பிரபஞ்சம், இதுதான் அனைத்துமே!. இதை நீங்கள் ஏன் என்று கேட்க முடியாது, உங்கள் ‘ஏன்’ என்பது மிகவும் சிறிய வட்டத்துக்குட்பட்டது. உங்களால் எல்லையற்ற ஒரு ‘ஏன்’ என்ற கேள்வியைக் கேட்க முடியாது, ஏனென்றால் நீங்கள் படைப்பு என்றழைக்கும் விஷயம் எல்லைகளற்ற ஒரு நிகழ்வு. எனவே இப்படி ஒரு குறுகிய வட்டத்துக்குட்பட்ட ஏன் என்பது ஒரு அர்த்தமில்லாத கேள்வி.
பிரபஞ்சத்தைப் பற்றிய எந்தவொரு கேள்வியும் அர்த்தமற்றது, ஏனென்றால் அனைத்து கேள்விகளுமே ஒரு வட்டத்துக்குட்பட்டுதான் இருக்கின்றன. அனைத்து கேள்விகளுமே மனதின் எல்லைகளுக்குட்பட்ட காரண அறிவிலிருந்துதான் உருவாகி வருகின்றன. ஆனால் நீங்கள் கேள்வி கேட்கும்போது, எல்லையற்றதைப் பற்றி கேட்கிறீர்கள். எனவே படைப்பைப் பற்றிய கேள்விகள் அர்த்தமற்றவை. பதில்களும் அதுபோலவே அதே அளவு அர்த்தமற்றவைதான். படைப்பில் ‘ஏன்’ என்பதே இல்லை! படைப்பு அங்கே இருக்கிறது, அவ்வளவுதான்! அதை உங்கள் கேள்வியாலும் அளக்க முடியாது, என்னுடைய பதிலாலும் விளக்க முடியாது. இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி நீங்கள் எதையாவது கேட்டாலோ அல்லது சொன்னாலோ, அது மொத்தமும் அர்த்தமற்றதாக இருக்கும். அவை அனைத்துமே உங்களுடைய முட்டாள்தனங்கள்தான்.

இதற்கும், படைப்புக்கும் உண்மையில் எந்த சம்பந்தமும் இல்லை. படைப்பு என்பது இப்படி இருக்கிறது என்று நான் சிந்திக்கலாம். இல்லை, அது அப்படி இருக்கிறது என்று வேறொருவர் சிந்திக்கலாம். இவற்றுக்கும், படைப்புக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அது அங்கே இருக்கிறது. படைப்பின் விளையாட்டில் நீங்களும் ஒரு பகுதி. ஒரு சின்னஞ்சிறிய பகுதி. இப்போது இதில் கேள்வி என்னவென்றால், நீங்கள் அந்தப் படைப்பின் ஒரு பகுதியாக மட்டும் இருக்க விரும்புகிறீர்களா, அல்லது நீங்களே படைப்பவராக மாற விரும்புகிறீர்களா? என்பதுதான். இனியும் படைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் விருப்பமில்லாத ஒரு மனிதர், இப்போது நடைபெற்று வரும் செயல்களின் அனுபவங்கள் அவருக்குப் போதாமல் ஆகும்போது, படைப்பவரையே அவர் உணர விரும்பும்போது, இதைத்தான், யோகா அல்லது ஆன்மீகத்திற்கான முழுமையான வழி என்று கூறுகிறோம். படைப்புடன் மட்டும் நீங்கள் திருப்தியடையாமல், படைப்பவராகவே நீங்கள் மாற விரும்பினால், அந்த படைப்பின் மூலமாகவே நீங்கள் ஆகிவிட விரும்பினால், நீங்கள் ஆன்மீகப் பாதையில் இருக்கிறீர்கள் என்று பொருள். படைப்பே உங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்து, அதனுடன் மட்டுமே நீங்கள் திருப்தியடைந்துவிட்டால், நீங்கள் பொருட்தன்மை நிறைந்தவர் என்று பொருள். படைப்பவராகவே மாற விரும்பினால், நீங்கள் ஒரு ஆன்மீக சாதகர்.

#ஸ்ரீ

Comments