ஒருவருடைய வாழ்க்கை எத்தனை நீண்டதாக இருந்தாலும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் என்னவோ நிகழ்காலம் மட்டுமே.

ஒருவருடைய வாழ்க்கை எத்தனை நீண்டதாக இருந்தாலும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் என்னவோ நிகழ்காலம் மட்டுமே.

நல்லதோ, கெட்டதோ பல நிகழ்வுகள் நடந்து முடிந்து, அது நமது வாழ்க்கையின் வரலாறாகப் பதிவாகிவிட்டது. கடந்து போன அந்தக் காலத்தில் நடந்து முடிந்திருக்கிற நிகழ்வுகளை நம் விருப்பப்படி இனிமேல் மாற்றியமைத்திட முடியாது.

இனி எத்தனை காலம் நாம் வாழப் போகிறோம்? அக்காலத்தில் என்னவெல்லாம் நடக்கப் போகின்றன? என்ற கேள்வி எழுப்பும் எதிர்கால நிகழ்வுகளை நாம் எட்டிப்பார்க்க முடியாது.

நம் கட்டுப்பாட்டில் இல்லாத கடந்த கால நிகழ்வுகளின் நினைவுகளிலும், எதிர்காலக் கனவுகளிலும் மூழ்கிக்கொண்டு, நம் கட்டுப்பாட்டில் உள்ள  நிகழ்காலத்தை நாம் வீணடித்துக் கொண்டிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கையானது அல்லவா?

இந்தக் கணம் மட்டுமே நம்முடையது. நாம் நினைத்தபடி எப்படியும் நடந்துகொள்ள இந்தக் கணத்தில் மட்டுமே முடியும்.

முழுமையாக நம்மால் செயலாற்ற முடிந்த இந்தக் கணத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நமது எதிர்கால வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது.

“80 வயதில் நாம் கம்பை ஊன்றி நடக்கப் போகின்றோம் என்பதற்காக இப்போதே கம்பை ஊன்றி நடக்கப் பழகலாமா?” 

நாம் அதிகமாகக் கோட்டை விடுவது நிகழ்காலத்தைத் தான்.

கடந்த காலத்தில் அப்படியாகி விட்டது, இப்படியாகி விட்டது என்று வருத்தப்பட்டும், நாளை என்ன நடக்குமோ? என்று கவலைப்பட்டுக் கொண்டும் இருந்தால் என்ன நிகழ்ந்து விடப்போகிறது.

நேற்றைய வருத்தங்களால் கடந்த காலம் மாறப்போவதுமில்லை. நாளைய கவலைகளால் எதிர்காலம் சிறந்துவிடப் போவதுமில்லை.

வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் எல்லா வெற்றிகளுக்கும், மேன்மைகளுக்கும் அடிப்படை சூட்சுமமாக இருப்பது நிகழ்காலத்தின் செயல்பாடுகள் மட்டுமே.இந்தக் கணத்தில் மட்டுமே நம்மால் முழுமையாக செயல்பட முடியும்.

“நம்முடைய முக்கியமான வேலை தூரத்தில் மிக மங்கலாகத் தெரிவது என்ன என்று தெரிந்து கொள்வதல்ல. நம் கண் முன்னால் இருப்பது என்ன என்று தெரிந்து கொண்டு அதைச் சிறப்பாகச் செய்வது தான்”

இந்தக் கணத்தை நாம் எல்லோரும் சிறப்பாகப் பயன்படுத்தினால்  எதிர்காலம் தானாகச் சிறப்பாய் அமைந்துவிடும்.கடைசி வரை நம்மால் செயல்பட முடிந்த காலம் நிகழ்காலம் மட்டுமே எனவே நிகழ்காலத்தில் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டும்.

நேற்றைய நிகழ்வுகளில் இருந்து ஏதாவது பாடம் இந்தக் கணத்தில் உணர்வோமானால், அது நம்மை பக்குவப்படுத்தி அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். நாளைய நாளின் வெற்றிக்காகத் திட்டமிட்டு ஏதாவது இந்தக் கணத்தில் செய்வோமானால் அது நம்மை முதல்நிலை நோக்கி முன்னேற்றும்.

இந்த கணத்தில் நாம் மேற்கொள்ளும் செயல்தான் நேற்றைய அனுபவத்திற்கும், நாளைய நடப்பிற்கும் பாலமாக அமைந்து வெற்றியை ஈட்டித்தரும்.

“நதி நீரோட்டத்தில் நாம் ஒரு முறை காலை நனைத்த நீரில் இன்னொரு முறை நனைக்க முடியாது. ஒவ்வொரு முறையும் நீர் புதிதாகவே வரும். அதைப்போல தான் கால ஓட்டத்தில் ஒவ்வொரு கணங்களும் புதியவையே. இந்தக் கணத்தில் வாழும் முறையைப் பொறுத்தே நமது வெற்றிகளும், தோல்விகளும் தீர்மானிக்கப்படுகின்றன”

மாற ஆசைப்படுகிறீர்களா? அதற்கான முதல் முயற்சியை இந்தக் கணத்திலேயே ஆரம்பியுங்கள். ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதற்கான முதல் அடியை இந்தக் கணத்திலே தொடங்குங்கள்.

ஏனென்றால் இன்றும் நமதே.                    🙏�நன்றி நண்பர்10🙏

Comments