மீண்டும் நாரதர் கம்சன் சந்திப்ப

*லீலை கண்ணன் கதைகள்...44…மீண்டும் நாரதர் கம்சன் சந்திப்பு...*
நாரத முனி, கிருஷ்ணன் ஒரு அரக்கனையும் கொள்வதை பார்த்துக்கொண்டிருந்தார், கம்சனின் வதம் நடக்க வேண்டிய நேரமும் வந்தது. நாரதர் அதனை பற்றி கூற கம்சனிடம் சென்றார், அசுரன் ஆனாலும் கம்சன், நாரதரை பணிவுடனே வரவேற்றான். இருவரும் பல விஷயங்களை பற்றி அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இறுதியாக விஷயத்துக்கு வந்தார் நாரதர், "கம்சா நீ இங்கு நடக்கும் மர்மத்தை பற்றி தெரிந்து வைத்திருக்கவில்லை, பெண்ணாக பிறந்த எட்டாவது குழந்தை தான் யசோதையின் மகள், மற்றும் கிருஷ்ணன் தான் தேவகியின் உண்மையான எட்டாவது மகன். பலராமன் ரோஹிணிக்கும் வசுதேவருக்கும் பிறந்தவன். உன்னிடம் உள்ள பயத்தால் தான் நந்தரிடம் கிருஷ்ணன் ஒப்படைக்கப்பட்டான். இப்பொழுது கிருஷ்ணன் வளர்ந்து விட்டான், இனி உன்னை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள்."
இதை கேட்ட கம்சன் மிகவும் கோபமுற்றான். வசுதேவர் அவனை ஏமாற்றியதற்காக கொல்லப்பட வேண்டும் என்று முடிவு செய்தான். இதனை கேட்ட நாரதர், "நீ என்ன செய்தாலும் உனக்கு உதவாது, நீ இனி கிருஷ்ணனை எப்படி கொல்லலாம் என்று மட்டுமே முடிவு செய்ய வேண்டும்" என்றார் நாரதர். நாரதர் ஆயிற்றே, அவர் வேலை முடிந்ததும், “நாராயண நாராயண” என்று கூறி கொண்டே புறப்பட்டார். மறுபடியும் கம்சன் வசுதேவரையும் தேவகியையும் சிறையில் போட்டு அடைத்தான்.
கேசி என்ற அசுரனை அழைத்து "பிருந்தாவனம் சென்று கிருஷ்ணனையும் பலராமனையும் கொன்று விட்டு வா" என்றான். அவனை அனுப்பிவிட்டு அனைத்து மந்திரிகளையும் அழைத்தான். அதில் முக்கியமானவர்கள் முஷ்டிகா, சனுறா, ஷாலா, டோஷாலா. அவர்களை நோக்கி "என் இனிய நண்பர்களே, வீரர்களே, உங்களுடைய துணை எனக்கு தேவை. வாசுதேவனின் எட்டாவது மகன் பிருந்தாவனத்தில் வசிப்பதாக கேள்விப்பட்டேன், அவனையும் அவன் அண்ணன் பலராமனையும் அழிக்க கேசியை அனுப்பியுள்ளேன், இதில் கேசி வெற்றி பெறுவான் என்று நம்புகிறேன். அவனால் முடியவில்லை என்றால், கிருஷ்ணன் பலராமனை நமது ஊரில் நடக்கும் குத்து சண்டைக்கு அழைத்து உங்கள் மூலம் அவர்களை வீழ்த்தலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் நால்வர் தான் நமது ஊரில் நல்ல குத்து சண்டை வீரர்கள், உடனே சென்று சரியான இடத்தில் குத்து சண்டை மைதானத்தை அமைத்திடுங்கள், எல்லோரும் பார்க்கும் இடத்தில் அமைப்பது முக்கியம், அவர்கள் இயற்கையாக மரணம் அடைந்ததை போல இருக்குமாறு செய்யுங்கள். யானை படை தளபதியே, இந்த அரங்கம் வாசலில் நமது குவலயபிதா என்ற யானையை நிறுத்துங்கள், அவர்கள் உள்ளே நுழையும்போது அவர்களை யானையின் கால்களால் நசுக்க சொல்லுங்கள். நான் ஈசனுக்காக யாகம் நடத்தி நீண்ட ஆயுளை கேட்க போகிறேன்."
கம்சன் என்னத்தான் தைரியமாக பேசினாலும், மனதிற்குள் சிறிய பயம் இருந்து கொண்டே இருந்தது. தனது நண்பனான அக்ருரா என்ற யாதவனை அழைத்து, "எனது அருமை நண்பா, எனக்கு ஒரு சின்ன உதவியை நீ செய்ய வேண்டும், நீங்கள் சென்று கிருஷ்ணனையும் பலராமனையும் எந்த வித தடங்கலும் இன்றி நமது தேரில் அழைத்து வரவேண்டும். தேவர்கள், மஹா விஷ்ணுவின் துணையுடன் என்னை கொள்ள முயற்சிப்பதாக கேள்விப்பட்டேன், அதுவும் கிருஷ்ணன் பலராமன் உருவில். நீ சென்று அந்த இருவர் மற்றும் அவரது தந்தை நந்தர், மற்ற கோபியர்களை அழைத்து வா, அவர்கள் இங்கு வந்தால் நமது யானை அவர்களை கொன்று விடும். யானையிடம் இருந்து தப்பித்தால் நமது குத்து சண்டை வீரர்கள் அவர்களை கொன்று விடுவார்கள்”.
அக்ருரன் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, கம்சனுக்கு சில அறிவுரைகளை கூறினான். "என் அருமை தோழா, நீ என்மேல் வைத்திருக்கும் அன்பினை நினைதால் பெருமையாக உள்ளது, நீ உன்னை ஆபத்தில் இருந்து காப்பற்றி கொள்ள நினைப்பது சரி தான், ஆனால் ஒரு மனிதனின் வாழ்கையில் உள்ள வெற்றி தோல்வி அனைத்தும் ஆண்டவன் கையில் மட்டுமே உள்ளது, அதனால் அனைத்தையும் ஒன்று போலவே எடுத்து கொள்ள வேண்டும், நீ சொன்னதை நான் கண்டிப்பாக செய்கிறேன் உனது கட்டளையின்படி." இதை கூறிவிட்டு அக்ருரன் பிருந்தாவனத்திற்கு புறப்பட்டார்.

Comments