ஆலயத்தூய்மை ஆண்டவன் சேவை

ஆலயத்தூய்மை ஆண்டவன் சேவை
நாம் கோயிலுக்கு செல்ல பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் இன்று பல கோயில்கள் அசுத்தமாக இருப்பதற்கு காரணம் நாம்தான். விளக்குகளை கண்ட இடத்தில் வைத்து அழுக்காக்கிவிடுகிறோம். அதேபோல் கற்பூரம் ஏற்றுவதிலும் கோயில் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை மீறி கற்பூரம் ஏற்றி கரிபடிந்த சுவர்களாக மாற்றிவிடுகிறோம், கரி படியாத சுவறாக இருந்தால் நமது பெயரையோ அல்லது வேறு ஏதேனும் தேவையற்ற கிருக்கல்களையோ செய்துவிடுகிறோம். சில கோயில்களில் சென்ற வாரம் ஏற்றிய எலுமிச்சை தீபம் இந்த வாரம் ஊறுகாயாக இருக்கும். அதையும் பார்த்துவிட்டு அடுத்த எலுமிச்சை தீபத்தினை ஏற்றிவிட்டு வந்துவிடுகிறோம். சில விசேஷ நாட்களில் குறிப்பிட்ட சன்னதியில் மட்டும் அளவுக்கு அதிகமான விளக்குகளை ஏற்றியிருப்பதை நாம் காணலாம் ஆனால் மற்ற சன்னதிகளைப் பார்த்தால் சில சன்னதிகளில் விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்திருக்கும். நாம் ஏன் அந்த இருண்ட சன்னதியில் விளக்கினை ஏற்றிவிட்டு உனக்கான விளக்கினை அங்கே ஏற்றியுள்ளேன் இறைவா என வேண்டக்கூடாது.
சில சமயம் கோயில் பிரசாதத்தை முழுவதையும் சாப்பிட்டுவிட்டோ அல்லது சாப்பிடாமலோ இலைகளையும் நெகிழியையும் Plastic கோயில் வளாகத்தில் போட்டுவிட்டுச் சென்றுவிடுகிறோம். இதனால் கோயில்களின் நிலை என்ன?
இன்று கோயிலுக்குச் செல்வதே நாம் செய்யும் பெரும்புண்ணியமாகும், இறைவனுக்காக விளக்கேற்றுவதும் பூஜை பொருட்கள் அளிப்பதும் அதைவிட பெரும்புண்ணியமாகும் ஆனால் கோயிலை அசுத்தம் செய்யாமல் கொயில் வளாகத்தை பெருக்கியோ அல்லது சுற்றி உள்ள புதர் செடிகளை அகற்றியோ அல்லது எண்ணெய் படிந்த இடத்தை தூய்மை செய்தோ பாருங்கள் அது அனைத்திலும் பெரும்புண்ணியமாகும். 
கோயிலை சுத்தம் செய்ய யாராவது இருப்பார்கள் என்று எண்ணுவது தவறு, நாம் எந்த கோயிலுக்குச் சென்றாலும் இறைவனை தரிசிக்க யாரேனும் தடுத்தால் நாம் விட்டுவிடுவோமா? அது எனது உரிமை என குரல் கொடுப்போம் அல்லவா? அதேபோல் ஒவ்வொரு கோயிலின் தூய்மையை பாதுகாப்பது நமது கடமை அல்லவா?.
திருசூர்.சிவ.இராம.ஜோதி

Comments