உலக வாழ்க்கையின் நோக்கம்

புத்தரின் போதனைகள்!
உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.

❉ ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்.

❉ நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும். ❉ அறிஞன் விழிப்படைந்து தன் வாழ்வில் கருத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழ்ந்து, வெள்ளத்தால் சேதம் அடையாத ஒரு தீவைப்போல தன்னைப் பலப்படுத்திக்கொள்கிறான்.

❉ ஒருவன் என்ன செயல் செய்கிறானோ, அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான். ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறான். ஆகவே, நம் செயல்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. ❉ ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும். வேறு ஒருவன் அவனுக்குத் தலைவனாக இருக்க முடியாது. தன்னைத் தானே அடக்கி கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற முடியும்.

❉ கையில் புண் இல்லையென்றால் ஒருவன் தன் கையில் நஞ்சையும் எடுக்கலாம். நஞ்சு அவனைப் பாதிப்பதில்லை. அதுபோல தீங்கு செய்யாத ஒருவனுக்குத் தீங்கு நேர்வதில்லை. ❉ ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.

❉ எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்தது என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பற்றுங்கள்.

❉ பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான். அமைதிக்கான உறுதியும் அதுவே  ❉ உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை.அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை

❉ உடல் நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும்.
ஆனால் மன நோயை தாங்கி கொள்ள முடியாது.

❉ தீமையை நன்மையால் வெல்லுங்கள்,
பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்  ❉ தனக்கு எல்லாம் தெரியும் என இறுமாப்போடு திரிபவன் முட்டாள்.
அந்த முட்டாள்தனமே அவனை படு பாதாளத்தில் தள்ளி விடும் .

❉ அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும்
அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது.

❉ நாம் அனைவரும் உண்மையானவர்களாகத் திகழ்வோமாக. லட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றால், நமது பலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம். லட்சியத்தை நாம் இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். லட்சியத்தைத் தாழ்ந்த நிலைமைக்குக் கொண்டு செல்ல எவரும் வேண்டாம்.  ❉ முன்னேறிக்கொண்டே இரு ! முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாக நினைத்தாலும், அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம். அவை போன்ற தவறுகளை முன்பு செய்யாமல் இருந்திருந்தால்; இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று இப்போது நம்புகிறாயா? அந்தத் தவறுகளே தான் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும். உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். லட்சியத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறியபடியே இரு!  ❉ மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும்,
செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும்.

❉ துன்பம் இத்தகையது என்று உணர்ந்தால்,
நாம் துன்பப்படுவோர் அனைவரையும் நம் சகோதரர்களாகப் பாவிப்போம். தன் பகைவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், தன்னை வெறுப்பவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், அடக்கம் இல்லாத மனம் ஒருவனுக்கு அதிகத் துன்பத்தைத் தருகிறது.  ❉ சம்சார யாத்திரையை முடித்துக் கொண்டவனுக்கு,
அனைத்து துக்கத்திலிருந்து நீங்கியவனுக்கு, பற்றுக்களிலிருந்து விடுதலை பெற்றவனுக்கு எல்லா விலங்குகளையும் உடைத்தெறிந்தவனுக்கு துன்பம் ஏற்படுவதில்லை.

❉ எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப்பட்ட பொருளை இழப்பது துன்பம்தான். ஆசையும் பொருளும் அற்றவனுக்கு விலங்குகள் இல்லை.

❉ கோபத்தை கைவிடு. செருக்கை கைவிடு. உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை.  ❉ பிரியம் உள்ளவரைக் காண்பதும்,
பிரியம் இல்லாதவரைக் காண்பதும் வேதனை தரும்.

❉ துன்பத்தை அழிக்கத் தூய வாழ்க்கை வாழுங்கள். உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே.

Comments