PRONING FOR SELF CARE

கொரோனா தொற்றினால் 
பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருக்கும் மக்களின் கனிவான கவனத்திற்கு 

குப்புறப் படுத்தலின் நன்மைகள் 
PRONING FOR SELF CARE 

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை 

கொரோனா தொற்றடைந்து வீடுகளில் மருத்துவமனைகளில் இருக்கும் சொந்தங்களே இந்த கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் குப்புறப்படுத்தல் முறையைப் பற்றிப் படித்து பின்பற்ற முயற்சி செய்யுங்கள் 

இதை PRONING என்கிறோம் 

சாதாரணமாக நாம் முதுகு கீழ்ப்புறம் வயிற்றுப்பகுதி மேற்புறமாகவே படுத்துப்பழகியிருப்போம்.  இதை SUPINE POSITION .மல்லாக்க படுத்தல் என்கிறோம் 

கொரோனா பாதித்து நுரையீரலில் தொற்று பரவிக்கொண்டிருக்கும் சூழலில் மல்லாக்கபடுப்பதை விட குப்புறப்படுப்பது நன்றாக உதவும். இது அறிவியல் பூர்வமான உண்மையும் கூட. 

குப்புறப்படுக்கும் போது நமது வயிற்றுப்பகுதி கீழ்ப்புறமாகவும் முதுகுப்பகுதி மேல்ப்புறமாகவும் இருக்கும். 
இதனால் நுரையீரலின் சுவாசம் உட்கொள்ளும் வெளியிடும் தன்மை மேம்படும்.  இதன் மூலம் உடலுக்கு குறைவான சுவாசிக்கும் பளுவில் அதிகமான  ஆக்சிஜன்  கிடைக்கும். 

வீட்டுத்தனிமையில் இருக்கும் போது ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டரில் 94% க்கு கீழ் ஆக்சிஜன் அளவுகள் இருக்கும் நபருக்கு 
இந்த முறையில் படுப்பதால் மூச்சு விடுவதில் சிரமம் குறைந்து ஆக்சிஜன் அளவுகள் கூடுவதை கண்கூடாக பார்க்கலாம்.

கூடவே அவரின் உடல் உஷ்ணம், ஆக்சிஜன் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். 

ஆக்சிஜன் அளவுகள் குறைவதை பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி கொண்டு மட்டுமே அறிய முடியும் . எனவே வீட்டுத்தனிமையில் இருக்கும் ஒவ்வொரு நபரிடமும் இருக்க வேண்டிய முக்கிய கருவி "ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர்" 

இந்த ப்ரோனிங்கை எப்படி செய்வது ? 

இதற்கு   நான்கு தலையணைகள் வேண்டும்

ஒரு தலையைணை குப்புறப்படுத்து தலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.. 

இரண்டு தலையணைகளை கால்மாட்டுக்கு வைத்து மேடேற்ற வேண்டும் 

இன்னும் இரண்டு தலையணைகளை ஒன்றன் மீது ஒன்றாக
நீளமாக நெஞ்சுப்பகுதி வயிற்றுப்பகுதி மற்றும் தொடைப்பகுதிக்கு கீழ் இருக்குமாறு வைத்துப்படுக்க வேண்டும். ( படத்தைக்காண்க) 

இப்படி படுக்கும் போது 
அரை மணிநேரம் முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த படுக்கும் முறையை லேசாக மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். 

முதல் அரை மணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை 
வயிற்றுப்பகுதி கீழ் இருக்குமாறு குப்புறப்படுக்க வேண்டும். 

அடுத்த அரை மணி நேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை வலப்பக்கம் திரும்பி ஒருபக்கமாக படுக்க வேண்டும் 

அடுத்த அரை மணிநேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை  எழுந்து கால்களை நன்றாக நீட்டி உட்கார்ந்திருக்க வேண்டும். கால்களைத் தொங்கப்போடக்கூடாது.

அடுத்த அரைமணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை இடப்பக்கம் திரும்பி ஒருபக்கமாக படுக்க வேண்டும் 

அதற்கடுத்த அரைமணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை மீண்டும் குப்புறப்படுத்திருக்க வேண்டும். 
( படத்தைக் காண்க) 

அரைமணிநேரத்திற்கு ஒரு முறை மேற்சொன்ன பொசிசன்களை மாற்றமாற்றிக் கொண்டே இருப்பது சிறப்பு. 
முதியோர்களால் அவ்வாறு செய்ய இயலாது என்றால் அதிகபட்சம் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறையாவது பொசிசனை மாற்றி அமைப்பது நல்லது. 

பொசிசனை மாற்றி அமைக்காமல் ஒரே பொசிசனில் பல மணிநேரங்கள் படுத்துக்கிடப்பது அழுத்தப்புண்களை உருவாக்கிவிடும்.  அதிலும் குறிப்பாக இடுப்பெலும்பு, தண்டுவட முதுகெலும்பு முடியும் இடம் ( குதப்பகுதி) முழங்கால் மூட்டுப்பகுதி போன்ற எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும் இடங்களில் புண்கள் தோன்றலாம்.  அதை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். 

கட்டாயம் உணவு சாப்பிட்ட அரை மணிநேரத்திற்கு குப்புறப்படுக்கக் கூடாது. 

மேற்சொன்ன குப்புறப்படுத்தல் முறைகளை பொசிசன் மாற்றி பொசிசன் மாற்றி பகலில் விழித்திருக்கும் 16 மணிநேரமும் செய்யலாம்  
இரவில் உறங்கும் போது குப்புறப்படுத்து உறங்கலாம் அல்லது தங்களின் வழக்கம் போல ஒருபக்கம் படுத்து உறங்கலாம். 

தலையணைகளை தங்களின் வசதிக்கு ஏற்ப சிறிது நகர்த்திக்கொள்ளலாம்.  பிரச்சனை இல்லை.

இந்த குப்புறப்படுத்தலை முயற்சி செய்யக்கூடாதவர்கள் யார்? 

- கர்ப்பிணித் தாய்மார்கள் 

- ஆழ்சிரை ரத்த நாளக்கட்டிக்காக (DEEP VEIN THROMBOSIS) இரண்டு நாட்களுக்குள் சிகிச்சை எடுத்தவர்கள் 

- தீவிர இதய நோய் இருப்பவர்கள் 

- தண்டுவட எலும்புகள்/ இடுப்பெலும்பு/ தொடை எலும்பு முறிவுக்குள்ளானவர்கள் 

மேற்சொன்னவர்கள் ப்ரோனிங் செய்யக்கூடாது. 

ஏனைய  கொரோனா தொற்று பாசிடிவ் என்று வந்து வீடுகளில் தனிமையில் இருக்கும் அனைவரும் மேற்சொன்ன ப்ரோனிங் முறையை கடைபிடித்து 
நுரையீரலுக்கு எளிதில் ஆக்சிஜன் கிடைத்திடச்செய்து பலனடையலாம் 

இதனால் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு மரணமடையும் வாய்ப்பும் குறைகிறது 
வெண்டிலேட்டர் வரை செல்லும் நிலையும் குறைகிறது. 

அவசியமான எச்சரிக்கை 

ப்ரோனிங் செய்தும் ஆக்சிஜன் அளவுகள் கூடாமல் குறைந்து கொண்டே சென்றால் உடனே மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும் என்று அர்த்தம். 

ப்ரோனிங் குறித்த இந்த செய்தியை 
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள் 

நன்றி 

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை 

Comments